சங்கீதம் 22:1-20
1
“காலைப் பெண்மான்” என்ற இராகத்தில் பாடும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமல், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
2
என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
3
ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் நீர் பரிசுத்தர்.
4
உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர்.
5
அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை.
6
ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7
என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள்
8
“அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், யெகோவா அவனை இரட்சிக்கட்டும். அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள்.
9
ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.
10
நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர்.
11
நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, உதவிசெய்ய ஒருவருமில்லை.
12
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன.
13
தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள்.
14
என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; என் இருதயம் மெழுகு போலாகி எனக்குள்ளே உருகிப் போயிற்று.
15
என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர்.
16
நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள்.
17
என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.
18
அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.
19
ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
20
என்னை வாளுக்குத் தப்புவியும்; என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும்.
Settings