Aller au contenu
எண்ணாகமம் 21:21-35

எண்ணாகமம் 21:21-35

21
பின்பு இஸ்ரயேலர் எமோரியரின் அரசன் சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி,
22
“உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். நாங்கள் எந்த வயல் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம்; எந்தவொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர்கூட குடிக்கமாட்டோம். நாங்கள் நாட்டைக் கடக்கும்வரைக்கும் அரசபாதையின் வழியாகவே செல்வோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.
23
ஆனால் சீகோன் தன் பிரதேசத்தின் வழியாக இஸ்ரயேலரைப் போகவிடாதிருந்தான். அவன் தன் முழு படையையும் திரட்டிக்கொண்டு இஸ்ரயேலருக்கு விரோதமாகப் பாலைவனத்திற்கு அணிவகுத்துச் சென்றான். அவன் யாகாசை அடைந்தபோது இஸ்ரயேலருடன் சண்டையிட்டான்.
24
ஆனால் இஸ்ரயேலரோ அவனை வாளுக்கு இரையாக்கி அர்னோன் முதல் யாப்போக்கு வரையுள்ள அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார்கள். ஆனால் அம்மோனியரின் எல்லைவரை மட்டுமே கைப்பற்றினார்கள். ஏனெனில் அவர்களுடைய எல்லை அரண் செய்யப்பட்டு இருந்தது.
25
இஸ்ரயேலர் எமோரியரின் எல்லா பட்டணங்களையும் கைப்பற்றி அவற்றில் குடியேறினார்கள். எஸ்போனும், அதைச் சுற்றியுள்ள எல்லா குடியிருப்புகளும் இவற்றுள் அடங்கும்.
26
எஸ்போன் எமோரிய அரசன் சீகோனின் பட்டணமாயிருந்தது. அவன் முன்னிருந்த மோவாபின் அரசனுடன் சண்டையிட்டு அர்னோன் வரையிலிருந்த அவனுடைய நாட்டை அவனிடமிருந்து எடுத்திருந்தான்.
27
அதினாலே அவர்களுடைய கவிஞர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள், அது திரும்பவும் கட்டப்படட்டும்; சீகோன் பட்டணம் புதுப்பிக்கப்படட்டும்.
28
“எஸ்போனில் இருந்து நெருப்பு வெளியேறிற்று, சீகோன் பட்டணத்திலிருந்து சுவாலை வெளியேறிற்று. அது மோவாபின் ஆர் பட்டணத்தை எரித்தது அர்னோன் மேடுகளின் குடிகளையும் எரித்துப்போட்டது.
29
மோவாபியரே உங்களுக்கு ஐயோ கேடு! கேமோஷின் மக்களே நீங்கள் அழிந்தீர்கள்! அவன் தன் மகன்களை அகதிகளாகவும், தன் மகள்களை சிறைக்கைதிகளாகவும் எமோரிய அரசன் சீகோனிடம் ஒப்புக்கொடுத்தான்.
30
“ஆனால், நாங்களோ அவர்களைத் தள்ளி வீழ்த்தினோம்; தீபோன்வரை எஸ்போன் அழிந்தது. மேதேபாவரை பரந்திருக்கும் நோப்பா பகுதிவரையும் அவர்களை அழித்தோம் என்று பாடுகிறார்கள்.”
31
இப்படியாக இஸ்ரயேலர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்.
32
மோசே யாசேருக்கு உளவாளிகளை அனுப்பியபின், இஸ்ரயேலர் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள்.
33
பின்பு இஸ்ரயேலர் திரும்பி பாசானுக்குப்போகும் வழியாய்ப் போனார்கள். அப்பொழுது பாசானின் அரசன் ஓக் என்பவன் இஸ்ரயேலரை எதிர்த்து யுத்தம் செய்ய தனது முழு படையுடன் எத்ரேயுக்குப் போனான்.
34
ஆனால் யெகோவா மோசேயிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் நான் உன் கையில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.
35
அப்படியே இஸ்ரயேலர் அவனையும், அவன் மகன்களையும், அவனுடைய முழு படையையும் வெட்டி வீழ்த்தினார்கள். ஒருவரையும் தப்பிப்போக விடவில்லை. அவர்கள் அவனுடைய நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options