Skip to content
லூக்கா 24:4-28

லூக்கா 24:4-28

4
அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
5
அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
6
அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
7
‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
8
அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
10
மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
11
அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
12
ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
13
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
14
அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
15
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
16
ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
18
அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
20
தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
21
நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
22
அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
23
அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24
அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
26
கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
27
என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options