Skip to content
புலம்பல் 2:11-20

புலம்பல் 2:11-20

11
அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. நான் எனக்குள் வேதனையடைகிறேன். என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது. ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளும் குழந்தைகளும் பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள்.
12
அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள். அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம், “அப்பமும், பானமும் எங்கே?” எனக்கேட்டு தாயாரின் கைகளில் உயிரை விடுகிறார்கள்.
13
எருசலேம் மகளே! உனக்கு என்ன சொல்வேன்? உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்? சீயோன் கன்னி மகளே, நான் உன்னைத் தேற்றும்படி எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்? உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே. யார் உன்னைக் குணமாக்க முடியும்?
14
உனது இறைவாக்கு உரைப்போரின் தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே; உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி, அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை. அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும், வழிதவறச் செய்வதுமே.
15
உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்; எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள் கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது: “அழகின் நிறைவு என்றும், பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும் அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?”
16
உன் பகைவர்கள் எல்லோரும், உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்; அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது: “நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம். இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம். அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.”
17
யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை, நிறைவேற்றிவிட்டார். எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார், பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார். அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார்.
18
மக்களின் இருதயங்கள் ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன. சீயோன் மகளின் மதிலே, உனது கண்ணீர் இரவும் பகலும் ஒரு நதியைப்போல் ஓடட்டும்; உனக்கு ஓய்வு கொடாதே, கண்ணீர்விடாமல் இருக்காதே.
19
எழும்பு, இரவிலே முதற்சாமத்தில் கதறி அழு, யெகோவாவினுடைய சமுகத்தில் உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று. ஒவ்வொரு தெருவின் முனையிலும், பசியினால் மயங்கி விழும் உனது பிள்ளைகளின் உயிருக்காக அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து.
20
“யெகோவாவே, கவனித்துப் பாரும்: நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ? பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ? தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ? ஆண்டவரின் பரிசுத்த இடத்தில் ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ?
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options