புலம்பல் 2:1-12
1
யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்; இஸ்ரயேலின் சீர்சிறப்பை வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்; அவர் தமது கோபத்தின் நாளில் தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை.
2
யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; யூதா மகளின் கோட்டைகளை தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். அரசுகளையும், அதன் இளவரசர்களையும் அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார்.
3
அவருடைய கோபத்தினால் இஸ்ரயேலின் முழு பலத்தையும் இல்லாமல் பண்ணினார். அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். அவர் யாக்கோபின் நாட்டில், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார்.
4
அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது. அவர் பகைவனைப்போல கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்; சீயோன் மகளின் கூடாரத்தில் தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார்.
5
ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்; அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி, அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார். யூதாவின் மகளுக்கு புலம்பலையும், துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார்.
6
அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார். யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும், ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்; தமது கடுங்கோபத்தில் அரசனையும், ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார்.
7
யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து, தமது பரிசுத்த இடத்தையும் கைவிட்டார். அவளுடைய அரண்மனைகளின் சுவர்களை பகைவரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் நியமித்த பண்டிகை நாளிலிருப்பதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
8
யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை அழிப்பதற்குத் தீர்மானித்துவிட்டார். அவர் ஒரு அளவு நூலை நீட்டி அளந்தார். அவர் அழிப்பதிலிருந்து தமது கையை விலக்கிக் கொள்ளவில்லை. அதனால் அவர் அரண்களையும், மதில்களையும் புலம்பச் செய்தார்; அவை ஒன்றாக பாழாய்ப்போயின.
9
எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன; அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார். அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும் நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் இல்லாமற்போயிற்று. அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை.
10
சீயோன் மகளின் முதியோர் மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு, துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள். எருசலேமின் இளம்பெண்கள் தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள்.
11
அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. நான் எனக்குள் வேதனையடைகிறேன். என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது. ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளும் குழந்தைகளும் பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள்.
12
அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள். அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம், “அப்பமும், பானமும் எங்கே?” எனக்கேட்டு தாயாரின் கைகளில் உயிரை விடுகிறார்கள்.
Settings