Skip to content
நியாயாதிபதிகள் 6:8-30

நியாயாதிபதிகள் 6:8-30

8
அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.
9
அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன்.
10
நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான்.
11
அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான்.
12
அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார்.
13
அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான்.
14
யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார்.
15
அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான்.
16
அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார்.
17
அதற்கு கிதியோன், “இப்பொழுது உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடம் பேசுபவர் உண்மையாகவே நீர் என்றால் அதற்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்.
18
நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்கும்வரையும், தயவுசெய்து இவ்விடம் விட்டு நீர் போகவேண்டாம்” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீ திரும்பி வரும்வரையும் நான் காத்திருப்பேன்” என்றார்.
19
உடனே கிதியோன் போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை பிடித்து சமைத்து, ஒரு எப்பா அளவு மாவில் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டான். இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு பானையிலும் ஊற்றி கர்வாலி மரத்தடியில் இருந்தவரிடம் கொண்டுவந்து கொடுத்தான்.
20
யெகோவாவின் தூதனானவர் அவனிடம், “இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் எடுத்து இந்த கற்பாறையின்மேல் வைத்து குழம்பை அதன்மேல் ஊற்று” என்றார். கிதியோனும் அப்படியே செய்தான்.
21
யெகோவாவின் தூதனானவர் தன் கையிலிருந்த கோலின் நுனியால் இறைச்சியையும், அப்பத்தையும் தொட்டார். அப்பொழுது கற்பாறையிலிருந்து நெருப்பு திடீரென எழுந்து இறைச்சியையும், அப்பத்தையும் சுட்டெரித்தது. யெகோவாவின் தூதனானவரும் மறைந்தார்.
22
கிதியோன் தான் கண்டது யெகோவாவின் தூதனானவர் என அறிந்தான்; அப்போது அவன் சத்தமிட்டு, “யெகோவாவாகிய ஆண்டவரே! யெகோவாவின் தூதனானவரை நான் முகமுகமாய்க் கண்டேனே!” என்று வியப்புடன் கூறினான்.
23
ஆனால் யெகோவா அவனிடம், “சமாதானமாய் இரு; பயப்படாதே! நீ சாகமாட்டாய்” என்றார்.
24
எனவே கிதியோன் அந்த இடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவ்விடத்திற்கு யெகோவா ஷாலோம் யெகோவாவே சமாதானம் என்று பெயரிட்டான். அவ்விடம் இந்நாள்வரை அபியேஸ்ரியரின் ஒப்ராவில் இருக்கிறது.
25
அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு.
26
அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார்.
27
எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான்.
28
அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
29
அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர். பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
30
உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options