Skip to content
நியாயாதிபதிகள் 11:12-33

நியாயாதிபதிகள் 11:12-33

12
பின்பு யெப்தா அம்மோனிய அரசனிடம் தூதுவர்களை அனுப்பி, “எங்கள் நாட்டை நீங்கள் தாக்கியிருப்பதற்கு எங்களுடன் உங்களுக்கிருக்கும் விரோதம் என்ன?” என்று கேட்டுவரும்படி சொன்னான்.
13
அம்மோனியரின் அரசன் யெப்தாவின் தூதுவர்களிடம், “இஸ்ரயேலர் எகிப்தில் இருந்து வெளியேறி வந்தபோது, அவர்கள் யோர்தான் வரைக்கும் அர்னோன் ஆறுதொடங்கி, யாப்போக் ஆறுவரையும் உள்ள எனது நாட்டை பிடித்துக்கொண்டார்கள். இப்போது அதைத் திரும்பவும் சமாதானமாக தந்துவிடுங்கள்” என்று கேட்டான்.
14
யெப்தா தூதுவர்களை அம்மோன் அரசனிடம் திரும்பவும் அனுப்பி அவனிடம் சொல்லச் சொன்னதாவது,
15
யெப்தா சொல்லுவது இதுவே: “இஸ்ரயேலர் மோவாபின் நாட்டையோ, அம்மோனியரின் நாட்டையோ பிடித்துக்கொள்ளவில்லை.”
16
ஆனால் அவர்கள் எகிப்தைவிட்டு வெளியே வந்தபோது, இஸ்ரயேலர் பாலைவனத்தின் வழியாகச் செங்கடல்வரை சென்று காதேசுக்கு வந்தார்கள்.
17
அப்பொழுது இஸ்ரயேலர் ஏதோமின் அரசனுக்குத் தூதுவரை அனுப்பி, “உமது நாட்டின் வழியாகச் செல்ல எங்களுக்கு அனுமதியளியும்” என்று கேட்டார்கள். ஆனால் ஏதோமின் அரசன் அதைக் கேட்கவில்லை. அவ்வாறே அவர்கள் மோவாப்பின் அரசனுக்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். அவனும் மறுத்துவிட்டான். எனவேதான் இஸ்ரயேலர் காதேசில் தங்கினார்கள்.
18
“பின்பு அவர்கள் பாலைவனத்தின் வழியாக, ஏதோம், மோவாப் நாட்டைச் சுற்றி சென்று மோவாப் நாட்டின் கிழக்குப்பகுதிக்கு வழியாகப்போய், அர்னோன் ஆற்றுக்கு மற்றப் பகுதியில் முகாமிட்டார்கள். மோவாப்பின் ஆட்சிப் பகுதிக்குள் அவர்கள் வரவில்லை. ஏனெனில் அர்னோன் ஆறே மோவாப்பின் எல்லை.
19
“அதன்பின்பும் இஸ்ரயேலர் எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குத் தூதுவர்களை அனுப்பி, ‘உமது நாட்டின் வழியாக எங்கள் சொந்த இடத்திற்குப் போக அனுமதிகொடும்’ என்று கேட்டார்கள்.
20
ஆனால் சீகோன் இஸ்ரயேலரை நம்பாது தனது ஆட்சிப் பகுதியைக் கடந்துசெல்ல விடவில்லை. மாறாக அவன் தன் மனிதர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, யாகாசிலே முகாமிட்டு இஸ்ரயேலரோடு போரிட்டான்.
21
“அப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சீகோனையும், அவனுடைய மனிதர்களையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்படைத்ததால் இஸ்ரயேலர்கள் அவர்களை முறியடித்தார்கள். இஸ்ரயேலர் அந்நாட்களில் அந்த இடத்தில் வாழ்ந்த எமோரியரின் எல்லா நாட்டையும் பிடித்துக்கொண்டார்கள்.
22
அதோடு அர்னோன் ஆற்றிலிருந்து யாப்போத் ஆறுவரைக்கும், பாலைவனம் தொடக்கம் யோர்தான் ஆறுவரைக்கும் உள்ள நாடுகளையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
23
“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, தனது மக்களான இஸ்ரயேலரின் முன்னால் எமோரியரைத் துரத்தியிருக்கையில் அந்நாட்டில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
24
உனது தெய்வமான கேமோஸ் தருவதை நீ எடுக்கமாட்டாயோ? அதுபோலவே எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு எதைக் கொடுத்தாலும் நாங்கள் அதை எங்கள் உடைமையாக்கிக்கொள்வோம்.
25
நீங்கள் சிப்போரின் மகனும், மோவாப்பின் அரசனுமான பாலாக்கைவிட சிறந்தவர்களோ? அவன் எப்பொழுதாவது இஸ்ரயேலருடன் தர்க்கம் பண்ணியதும், சண்டையிட்டதும் உண்டோ?
26
இஸ்ரயேலர் எஸ்போன், அரோயேர் சுற்றுப்புற குடியிருப்புகளிலும், அர்னோனை அண்டியுள்ள எல்லாப் பட்டணங்களிலும் முந்நூறு வருடகாலமாக குடியிருந்தார்கள். நீங்கள் அந்தக் காலத்தில் ஏன் அதைத் திருப்பி எடுக்கவில்லை.
27
நான் உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ஆனால் நீ எனக்கெதிராக யுத்தம் செய்வதனால் எனக்குத் தீங்கு செய்கிறாய். எனவே இந்நாளில் இஸ்ரயேலருக்கும், அம்மோனியருக்கும் இடையிலுள்ள தர்க்கத்தை நீதிபதியான யெகோவா தீர்த்து வைக்கட்டும்.”
28
ஆனால் அம்மோன் அரசனோ யெப்தாவின் செய்தி ஒன்றையும் கவனிக்கவில்லை.
29
அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் யெப்தாவின்மேல் வந்தார். அவன் கீலேயாத்தையும், மனாசேயையும் கடந்துபோய்; கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து அங்கிருந்து அவன் அம்மோனியருக்கு எதிராக முன்னேறிச் சென்றான்.
30
அங்கே யெப்தா யெகோவாவுடன் ஒரு நேர்த்திக்கடன் செய்தான். “நீர் எனது கையில் அம்மோனியர்களைக் கொடுப்பீராகில்,
31
நான் அம்மோனியரை வெற்றிகொண்டு திரும்பி வரும்போது, எனது வீட்டின் வாசலில் இருந்து முதன்முதல் என்னைச் சந்திக்க வருவது எதுவோ, அது யெகோவாவுக்குரியது; நான் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகப் பலியிடுவேன்” என்றான்.
32
பின்பு யெப்தா அம்மோனியருடன் யுத்தம் செய்யப்போனான்; யெகோவா அவர்களை யெப்தாவின் கையில் கொடுத்தார்.
33
யெப்தா அரோயேர் தொடக்கம் ஆபேல் கேராமின் வரைக்கும் மின்னீத்தின் சுற்றுப்புறங்களிலுள்ள இருபது பட்டணங்களை முறியடித்தான். இவ்வாறு இஸ்ரயேலர் அம்மோனியரை அடக்கினார்கள்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options