Skip to content
யோவான் 6:25-59

யோவான் 6:25-59

25
கடலின் மறுகரையிலே அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே, எப்பொழுது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள்.
26
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, இங்கே திருப்தியாகச் சாப்பிட்டதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்.
27
அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார்.
28
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
29
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை” என்றார்.
30
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பீர்? என்னத்தைச் செய்வீர்?
31
எங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு அவர் பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள்.
32
அப்பொழுது இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, என் பிதாவே பரலோகத்திலிருந்து வந்த உண்மையான உணவை உங்களுக்குக் கொடுக்கிறார்.
33
பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, உலகத்துக்கு ஜீவன் கொடுக்கிற நானே இறைவனின் உணவு” என்றார்.
34
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எப்பொழுதும் இந்த உணவை நீர் எங்களுக்குத் தாரும்” என்றார்கள்.
35
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நானே ஜீவ அப்பம். என்னிடம் வருகிறவன் ஒருபோதும் பசியுடன் போகமாட்டான். என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் தாகமடையமாட்டான்.
36
நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என்னைக் கண்டு இன்னும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்.
37
பிதா எனக்குக் கொடுக்கின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒருவரையும் நான் துரத்திவிடமாட்டேன்.
38
ஏனெனில் நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன்.
39
அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் நான் ஒருவரையும் இழந்துவிடக் கூடாது. கடைசி நாளிலே நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.
40
என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார்.
41
“நானே பரலோகத்திலிருந்து கீழே வந்த உணவு” என்று இயேசு சொன்னதால், யூதர்களில் சிலர் அவரைக்குறித்து முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.
42
அவர்கள் இயேசுவைப்பற்றி, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்பொழுது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
43
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார்.
44
“என்னை அனுப்பிய பிதா, ஒருவனை ஈர்த்துக்கொள்ளாவிட்டால், ஒருவரும் என்னிடத்தில் வரமாட்டார்கள். என்னிடம் வருகிறவரையோ நான் கடைசி நாளில் எழுப்புவேன்.
45
‘அவர்கள் எல்லோரும் இறைவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே பிதாவுக்குச் செவிகொடுத்து, அவரிடம் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான்.
46
இறைவனிடமிருந்து வந்த என்னைத்தவிர, ஒருவரும் பிதாவைக் கண்டதில்லை; நான் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறேன்.
47
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.
48
நானே ஜீவ அப்பம்.
49
உங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்கள்; ஆனால் அவர்கள் இறந்துபோனார்களே.
50
ஆனால் புசிக்கிறவர்கள் சாகாமல் இருக்கக்கூடிய அப்பம் இங்கு இருக்கிறது. அது பரலோகத்திலிருந்து வந்திருக்கிறது.
51
நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார்.
52
அப்பொழுது யூதர்கள், “இவன் எப்படி தன் மாம்சத்தை நமக்குச் சாப்பிடக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம் பண்ணத் தொடங்கினார்கள்.
53
இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் மானிடமகனாகிய எனது மாம்சத்தைச் சாப்பிட்டு, என்னுடைய இரத்தத்தை பானம் பண்ணாவிட்டால் உங்களுக்குள்ளே ஜீவன் இருக்கமாட்டாது.
54
எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.
55
ஏனெனில் எனது மாம்சமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.
56
எனது மாம்சத்தைப் புசித்து, எனது இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர், என்னில் தங்கி வாழ்கிறார். நானும் அவரில் வாழ்கிறேன்.
57
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினார். பிதாவின் நிமித்தமே நான் உயிர் வாழ்கிறேன். அதைப் போலவே என் மாம்சத்தைப் புசிக்கிறவர் என் நிமித்தம் வாழ்வடைவார்.
58
இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார்.
59
இயேசு கப்பர்நகூமிலே ஜெப ஆலயத்தில் போதித்தபோது இதைச் சொன்னார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options