யோவான் 20:19-29
19
வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
20
அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
21
மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
22
இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
23
நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
24
இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
25
எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
26
இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
27
பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
28
அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
29
அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
Settings