யோபு 15:20-29
20
கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்; துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
21
திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன; எல்லாம் நலமாய்க் காணப்படும்போது கொள்ளைக்காரர் அவனைத் தாக்குகிறார்கள்.
22
அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்; வாளுக்கு இரையாவதற்கென்றே அவன் குறிக்கப்பட்டிருக்கிறான்.
23
அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்; இருளின் நாள் தனக்குச் சமீபித்திருக்கிறது என்பதையும் அவன் அறிவான்.
24
வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து, யுத்தத்திற்கு ஆயத்தமான அரசனைப்போல் அவனை மேற்கொள்கின்றன.
25
ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி, எல்லாம் வல்லவருக்கு எதிராக இறுமாப்புடன் நடக்கிறான்.
26
அவன் தடித்த வலிமையான கேடயத்துடன், பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.
27
“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது, அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
28
அவன் பாழடைந்த பட்டணங்களிலும், கற்குவியலாக நொறுங்கி ஒருவரும் குடியிராத வீடுகளிலும் வாழ்வான்.
29
அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது, அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது.
Settings