எரேமியா 50:39-46
39
ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்; ஆந்தையும் அங்கு வசிக்கும். அது மீண்டும் ஒருபோதும் குடியேற்றப்படவுமாட்டாது. மக்கள் அங்கு சந்ததி சந்ததியாய் வாழவுமாட்டார்கள்.
40
இறைவன் சோதோமையும், கொமோராவையும் அதனை அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்த்ததைப்போலவே, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா அறிவிக்கிறார்.
41
“இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது.
42
அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது. பாபிலோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள்.
43
அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான். அவனுடைய கைகள் தளர்ந்து செயலிழந்தன. பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல, பயமும் வேதனையும் அவனைப் பற்றிக்கொண்டது.
44
யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார்.
45
“ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், பாபிலோனியரின் நாட்டுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.
46
பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.”
Settings