எரேமியா 48:14-28
14
“ ‘நாங்கள் போர்வீரர்; போரில் வலிமைமிக்க வீரர்கள்’ என்று நீங்கள் எப்படி கூறலாம்?
15
மோவாப் அழிக்கப்பட்டு, அவளுடைய பட்டணங்கள் தாக்கப்படும். அங்குள்ள திறமைமிக்க வாலிபர் கொலைசெய்யப்படுவார்கள்” என்று, சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய அரசர் அறிவிக்கிறார்.
16
“மோவாபின் வீழ்ச்சி மிக அருகிலுள்ளது. அவளுடைய அழிவு விரைவாய் வரும்.
17
அவளைச்சுற்றி வசிப்பவர்களும், அவளின் புகழை அறிந்தவர்களுமான நீங்கள் அவளுக்காக அழுது புலம்புங்கள். ‘வலிமைமிக்க செங்கோல் எப்படி முறிந்தது, மகிமையான கோலும் எப்படி முறிந்தது’ என்று சொல்லி அழுங்கள்.
18
“தீபோன் மகளின் குடிகளே! நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி வறண்ட நிலத்தில் உட்காருங்கள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள பட்டணங்களை அழித்துப் போடுவான்.
19
அரோயேரில் குடியிருப்பவர்களே! தெருவோரமாய் நின்று கவனித்துப் பாருங்கள்; ஓடுகிற மனிதனிடமும், தப்பி ஓடுகிற பெண்ணிடமும், ‘நடந்தது என்ன?’ என்று கேளுங்கள்.
20
மோவாப் தகர்க்கப்பட்டபடியால், அது அவமதிக்கப்பட்டிருக்கிறது. ஓலமிட்டு அழுங்கள். மோவாப் அழிக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
21
சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. ஓலோன், யாத்சா, மேபாகாத் பட்டணங்களுக்கும்,
22
தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும்,
23
கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும்,
24
கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள மோவாபின் பட்டணங்கள் எல்லாவற்றுக்கும் நியாயத்தீர்ப்பு வந்துள்ளது.
25
மோவாபின் பலம் எடுக்கப்பட்டது. அவளுடைய புயம் முறிக்கப்பட்டது” என்று யெகோவா அறிவிக்கிறார்.
26
“மோவாப் யெகோவாவை எதிர்த்தெழும்பினாள். ஆகையால் அவளை வெறிக்கப் பண்ணுங்கள். அவள் தன் வாந்தியிலேயே புரண்டு, மற்றவர்களுக்கு அவள் ஒரு கேலிப்பொருளுமாகட்டும்.
27
மோவாபே! இஸ்ரயேல் உனது கேலிப்பொருளாக இருக்கவில்லையோ? நீ அவளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இகழ்ச்சியுடன் உன் தலையை அசைக்கிறாயே; அவள் என்ன கள்ளர்களோடுகூட பிடிக்கப்பட்டவளோ!
28
மோவாபின் குடிகளே! நீங்கள் பட்டணங்களைவிட்டு மலைகளிலுள்ள பாறைகளின் மத்தியில் போய் குடியிருங்கள். குகை வாசலில் கூடுகட்டும் புறாவைப் போலிருங்கள்.
Settings