Skip to content
எரேமியா 48:29-39

மோவாபின் அகந்தைக்கு தெய்வீக கண்டனம்

எரேமியா 48:29-39
29
“மோவாபுடைய பெருமையைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அவளுடைய ஆணவத்தையும், இறுமாப்பையும், பெருமையையும், அகங்காரத்தையும், இருதய அகந்தையையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
30
அவளுடைய திமிரை நான் அறிவேன். இது பயனற்றது” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவள் அவளுடைய தற்புகழ் பேச்சினால் எதையுமே சாதிக்கப்போவதில்லை.
31
ஆகவே நான் மோவாபைக் குறித்துப் புலம்புவேன். மோவாப் நாடு முழுவதற்காகவும் நான் கதறுவேன். கிர் ஹெரெஸ் மனிதருக்காகவும் ஏங்கி அழுவேன்.
32
சிப்மா நாட்டிலுள்ள திராட்சைக் கொடிகளே! யாசேர் அழுவதைப்போல் நான் உங்களுக்காக அழுவேன். உங்கள் கிளைகள் கடல்வரை பரவி யாசேர் வரையும் எட்டியுள்ளன. உன்னுடைய பழுத்த பழங்கள் மீதும், திராட்சைப்பழ அறுப்பின் மீதும் அழிக்கிறவன் வந்துவிட்டான்.
33
மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும், பழத்தோட்டங்களிலிருந்தும், மகிழ்ச்சியும் களிப்பும் நீங்கிப்போயின. ஆலைகளிலிருந்து திராட்சரசம் வழிந்தோடுவதையும், நான் நிறுத்திவிட்டேன். மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு அவைகளை மிதிப்பார் யாருமில்லை. சத்தங்கள் அங்கு இருந்தாலும், அவை மகிழ்ச்சியின் சத்தங்கள் அல்ல.
34
“அவர்களுடைய அழுகையின் சத்தம் எஸ்போனிலிருந்து எலெயாலே வரைக்கும், யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அச்சத்தம் சோவாரிலிருந்து ஒரொனாயீம் வரைக்கும், எக்லத் ஷெலிஷியாவரைக்கும் மேலெழும்புகிறது. ஏனெனில் நிம்ரீம் நீரோடைகளும் வற்றிப்போயின.
35
மோவாபில் உயர்ந்த இடங்களில் பலிகளைச் செலுத்தி, தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டுகிறவர்களுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
36
“ஆகவே என் இருதயம் மோவாபிற்காக புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. கிர் ஹெரெஸ் மனிதருக்காக அது ஒரு புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. ஏனெனில் அவர்கள் சேமித்த செல்வம் போய்விட்டது.
37
தலைகளெல்லாம் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. தாடிகளெல்லாம் வெட்டப்பட்டிருக்கின்றன. கைகளெல்லாம் குத்திக் கீறப்பட்டிருக்கின்றன. இடுப்புகளெல்லாம் துக்கவுடையால் மூடப்பட்டிருக்கின்றன.
38
மோவாபிலுள்ள எல்லா வீட்டுக் கூரைகளின்மேலும், பொதுச் சதுக்கங்களிலும் துக்கங்கொண்டாடுதலே அல்லாமல் வேறொன்றுமில்லை. ஏனெனில் நான் மோவாபை ஒருவரும் விரும்பாத ஜாடியைப்போல் உடைத்துப் போட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
39
“மோவாப் எவ்வளவாய் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள்! மக்கள் எவ்வளவாய் புலம்புகிறார்கள்! மோவாப் எவ்வளவாய் வெட்கத்தினால் தலைகுனிந்து நிற்கிறாள்! மோவாப் ஒரு கேலிப்பொருளானாள்; அவள் தன்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் திகிலூட்டும் பொருளானாள்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options