எரேமியா 22:1-9
1
யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து.
2
தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
3
யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள்.
4
இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள்.
5
ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார்.
6
மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: “நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும், லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும், நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும், குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன்.
7
நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை அவனவனது ஆயுதங்களுடன் அனுப்புவேன். அவர்கள் உனது மிகச்சிறந்த கேதுருமர உத்திரங்களை வெட்டி அவைகளை நெருப்பிலே போடுவார்கள்.
8
“அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள்.
9
அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.”
Settings