எரேமியா 2:20-28
20
“வெகுகாலத்துக்கு முன்பே உன்னுடைய நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுத்துவிட்டேன். ‘நான் உமக்குப் பணிசெய்யமாட்டேன்’ என்று நீ சொன்னாய். உண்மையாகவே நீ ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும், ஒரு வேசியாகக் கிடந்தாய்.
21
நான் உன்னை திறமையானதும், தவறாது பலன் தருவதுமான சிறந்த திராட்சைக் கொடியாக நாட்டியிருந்தேனே. அப்படியிருக்க நீ எப்படி எனக்கு விரோதமாக ஒரு பயனற்ற காட்டுத் திராட்சையாக மாறினாய்?
22
நீ உன்னை உப்புச் சோடாவினால் கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும், உன் குற்றத்தின் கறை நீங்காமல் என் முன்னே இருக்கிறது” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
23
“ ‘நான் கறைப்படவில்லை; பாகால் தெய்வங்களின் பின்னே ஓடவில்லை’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? பள்ளத்தாக்கில் எவ்வாறு நடந்துகொண்டாய் என்று பார். நீ செய்தவற்றை எண்ணிப்பார்; நீ எல்லா திக்குகளிலும் ஓடித்திரிகிற பெண் ஒட்டகம்.
24
நீ காமவெறியால் காற்றை மோப்பம் பிடித்துத் திரிந்து, பாலைவனத்திற்குப் பழகிப்போன ஒரு காட்டுக் கழுதை. அது வேட்கைகொள்ளும் காலத்தில் அதை அடக்குகிறவன் யார்? அதற்குப்பின் செல்லும் எந்த ஆண் கழுதையும் களைப்படைய வேண்டியதில்லை; புணரும் காலத்தில் அவைகள் அதைக் கண்டுகொள்ளும்.
25
உன் பாதங்கள் வெறுமையாகி உன் தொண்டை வறளும்வரையும் அந்நிய தெய்வங்களைத் தேடி ஓடாதே என்றேன். ஆனால் நீயோ, ‘அது பிரயோசனமற்றது! நான் அந்நிய தெய்வங்களையே நேசிக்கிறேன். அவற்றிற்குப் பின்னாலேயே நான் போவேன்’ என்று சொன்னாய்.
26
“ஒரு திருடன் தான் பிடிபடும்போது அவமானப்படுவதுபோல், இஸ்ரயேல் வீடும் அவமானப்பட்டது. அவர்களும், அவர்களுடைய அரசர்களும், அவர்களின் அதிகாரிகளும், ஆசாரியரும், இறைவாக்கு உரைப்போரும் அவமானப்பட்டிருக்கிறார்கள்.
27
அவர்கள் ஒரு மரத்துண்டைப் பார்த்து, ‘நீ என் தந்தை’ என்றும், ஒரு கல்லைப் பார்த்து, ‘நீ என்னைப் பெற்றாய்’ என்றும் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் முகங்களையல்ல, முதுகுகளையே எனக்கு திருப்பிக் காட்டினார்கள்; இப்படியிருந்தும் அவர்கள் ஆபத்திலிருக்கும்போது, ‘நீர் வந்து எங்களைக் காப்பாற்றும்’ என்று சொல்கிறார்கள்.
28
அப்படியெனில் நீங்கள் உங்களுக்கு உருவாக்கிக்கொண்ட தெய்வங்கள் எங்கே? நீங்கள் ஆபத்திலிருக்கும்போது அவை வந்து உங்களைக் காப்பாற்றட்டும்! ஏனெனில் யூதாவே, உன்னிடம் அநேக பட்டணங்கள் இருப்பதுபோல் அநேக தெய்வங்களும் உன்னிடத்தில் உண்டு.
Settings