ஏசாயா 30:1-7
1
“பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து, பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள்.
2
என்னிடம் அறிவுரை கேளாமல் எகிப்திற்குப் போகிறார்கள். அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி, எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.
3
ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்; எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
4
சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும்,
5
அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம் ஒவ்வொருவரும் வெட்கத்திற்குட்படுவார்கள். அவர்களால் யாதொரு உதவியோ, நன்மையோ கிடைப்பதில்லை; வெட்கமும் அவமானமுமே கிடைக்கும்.”
6
நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: பெண் சிங்கங்களும், ஆண்சிங்கங்களும், விரியன் பாம்பும், பறக்கும் பாம்பும் இருக்கின்ற, துன்பமும் வேதனையுமுள்ள நாட்டின் வழியாகத் தூதுவர் போகிறார்கள். அவர்கள் தமது செல்வங்களைக் கழுதைகள்மேலும், திரவியங்களை ஒட்டகங்கள்மேலும் ஏற்றிக்கொண்டு, பயனற்ற நாட்டவரிடம் போகிறார்கள்.
7
எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது. ஆதலால் நான் எகிப்தை, ஆற்றலிழந்த ராகாப் என்று அழைக்கிறேன்.
Settings