யாத்திராகமம் 38:21-31
21
சாட்சிக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தொகைகள் இவையே: அவைகள் மோசேயின் கட்டளைப்படி, ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் மேற்பார்வையின்கீழ் லேவியர்களால் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
22
யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதை எல்லாம் செய்தான்.
23
தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான்.
24
பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும் என்று, அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்தத்தொகை, பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி 29 தாலந்துகளும் 730 சேக்கலுமாயிருந்தது.
25
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எண்ணப்பட்ட மக்கள் சமுதாயத்திலிருந்து பெறப்பட்ட வெள்ளி, பரிசுத்த இடத்தின் நிறையின்படி 100 தாலந்துகளும், 1,775 சேக்கலுமாயிருந்தது.
26
இருபது வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கிடப்பட்டு கடந்து செல்லும்போது ஒவ்வொருவரிடமிருந்தும் ஆளுக்கு ஒரு பெக்கா வசூலிக்கப்பட்டது. ஒரு பெக்கா என்பது பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி அரைச்சேக்கலாகும். எண்ணப்பட்ட மனிதரின் மொத்தத்தொகை 6,03,550 பேர்கள்.
27
கொடுக்கப்பட்ட அந்த 100 தாலந்து வெள்ளியும் பரிசுத்த இடத்திற்கான அடித்தளங்களையும், திரைக்கான அடித்தளங்களையும் செய்ய உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அடித்தளத்துக்கும் ஒரு அடித்தளத்துக்கு ஒரு தாலந்து என்ற கணக்கின்படி 100 அடித்தளங்களுக்கு 100 தாலந்துகள் பயன்படுத்தப்பட்டன.
28
அவர்கள் 1,775 சேக்கல் வெள்ளியை கம்பங்களுக்கான கொக்கிகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான மேற்பரப்பைத் தகட்டால் மூடுவதற்கும், கம்பங்களுக்கான பூண்களைச் செய்வதற்கும் உபயோகித்தார்கள்.
29
அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு 70 தாலந்துகளும், 2,400 சேக்கலுமாகும்.
30
அந்த வெண்கலத்தை சபைக் கூடாரத்தின் நுழைவு வாசலின் அடித்தளங்களையும், வெண்கலபீடத்தையும், அதற்கான வெண்கலச் சல்லடையையும், பீடத்திற்குரிய எல்லா பாத்திரங்களையும் செய்ய உபயோகித்தார்கள்.
31
அத்துடன் முற்றத்தைச் சுற்றியிருந்த அடித்தளங்களையும், வாசலின் அடித்தளத்தையும், இறைசமுகக் கூடாரத்திற்கும் அதைச் சுற்றியிருந்த முற்றத்திற்குமான கூடார முளைகளையும் செய்ய உபயோகித்தார்கள்.
Settings