உபாகமம் 33:20-29
20
காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது: “காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான். அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
21
அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான். தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது, அவன் யெகோவாவின் நீதியையும், இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.”
22
தாணைப்பற்றி அவன் சொன்னதாவது: “தாண் பாசானிலிருந்து, பாய்கிற சிங்கக்குட்டி.”
23
நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது: “நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான். அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.”
24
ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது: “ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன். சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும். அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும்.
25
உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும். நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும்.
26
“யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை. அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும், அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார்.
27
என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம். அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும். அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி, உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
28
இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும். தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில், யாக்கோபின் நீரூற்று பாதுகாப்பாய் இருக்கிறது. அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.
29
இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்? அவரே உங்கள் கேடயமும், உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார். அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார். உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள். நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை மிதிப்பீர்கள்.”
Settings