உபாகமம் 31:23-29
23
பின்பு யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவிடம் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீ பெலன்கொண்டு தைரியமாயிரு. நான் இஸ்ரயேலருக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் நீ அவர்களைக் கொண்டுபோவாய். நான், நானே உன்னோடு இருப்பேன்.”
24
மோசே இந்த சட்ட வார்த்தைகளையெல்லாம் ஒரு புத்தகத்தில், தொடக்கத்தில் இருந்து முடிவுவரை எழுதி முடித்தான்.
25
அதன்பின்பு யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் லேவியருக்கு மோசே கொடுத்த கட்டளையாவது,
26
“இந்த சட்டப் புத்தகத்தை எடுத்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகே வையுங்கள். அது உங்களுக்கு விரோதமாக ஒரு சாட்சியாக அங்கே இருக்கும்.
27
ஏனெனில், நீங்கள் கலகக்காரரும், பிடிவாதக்காரரும் என்பதை நான் அறிவேன். நான் உயிரோடு, உங்களுடன் இருக்கும்போதே யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறீர்களே! அப்படியானால் நான் இறந்தபின் எவ்வளவாய்க் கலகம் பண்ணுவீர்கள்?
28
உங்களுடைய கோத்திரங்களின் எல்லா சபைத்தலைவர்களையும், உங்கள் அதிகாரிகளையும் எனக்கு முன்பாகக் கூடிவரப்பண்ணுங்கள். நான் இந்த வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படியாகப் பேசி அவர்களுக்கு விரோதமான சாட்சியாக வானத்தையும் பூமியையும் அழைப்பேன்.
29
ஏனெனில் என் சாவுக்குப்பிறகு நிச்சயமாய் நீங்கள் முற்றிலும் சீர்கெட்டு நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள் என்று அறிந்திருக்கிறேன். வரப்போகும் நாட்களில் உங்கள்மேல் பேரழிவு வரும். யெகோவாவினுடைய பார்வையில் நீங்கள் தீமையைச் செய்து, உங்கள் கைகளின் செயலின் மூலம் அவருக்குக் கோபமூட்டுவதால் இந்த அழிவு நேரிடும்” என்றான்.
Settings