2 சாமுயேல் 14:1-11
1
தாவீது அரசனின் இருதயம் அப்சலோமுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை செருயாவின் மகன் யோவாப் அறிந்துகொண்டான்.
2
எனவே யோவாப் தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கேயுள்ள ஞானமுள்ள ஒரு பெண்ணை அழைத்தான். அவள் வந்தபோது யோவாப் அவளிடம், “நீ துக்கங்கொண்டாடும் பெண்ணைப்போல் பாசாங்கு செய்து துக்கவுடை உடுத்திக்கொள். தலைக்கு எண்ணெய் ஒன்றும் பூசாதே. இறந்துபோனவர்களுக்காக நெடுநாட்களாக துக்கங்கொண்டாடுகிறவளைப் போல நடிக்கவேண்டும்.
3
பின் அரசனிடம் போய் இவ்விதமாய் நீ பேசவேண்டும்” என்றான். அவ்வாறே யோவாப் அவள் பேசவேண்டியதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
4
அதன்படி தெக்கோவா ஊராளான அப்பெண் அரசனிடம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “அரசே, எனக்கு உதவும்” என்றாள்.
5
அப்பொழுது அரசன் அவளிடம், “உனக்கு என்ன துன்பம் நேரிட்டது?” என்று கேட்டான். அதற்கு அவள், “எனது கணவர் இறந்துவிட்டார். நான் ஒரு விதவை.
6
உம்முடைய அடியாளாகிய எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வயல்வெளியில் சண்டையிட்டார்கள். அவர்களை விலக்கிவிட ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுவிட்டான்.
7
இப்பொழுது எங்கள் வம்சம் எல்லாம் உமது அடியாளுக்கு எதிராக எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனை எங்களிடம் கொண்டுவா. அவன் கொலைசெய்த அவனுடைய சகோதரனின் உயிருக்காக அவனைக் கொலைசெய்யவேண்டும். சொத்துக்கு உரிமையாளனையும் அழிப்போம்’ என்கிறார்கள். இவ்வாறாக எனக்கு மிஞ்சியிருக்கும் அந்த ஒரே விளக்கை அணைத்து, என் கணவருக்கு பூமியின்மேல் பெயரும் சந்ததியும் இல்லாதபடி செய்வார்கள்” என்றாள்.
8
அப்பொழுது அரசன் அவளிடம், “நீ வீட்டிற்கு போ; நான் உன் சார்பில் ஒரு கட்டளை அனுப்புவேன்” என்றான்.
9
ஆனாலும் அந்த தெக்கோவா பெண் அரசனிடம், “என் தலைவனாகிய அரசே, இந்த குற்றம் என்மேலும் என் தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமருவதாக; அரசனும், அவரது சிங்காசனமும் குற்றமின்றி இருக்கட்டும்” என்றாள்.
10
அதற்கு அரசன், “உனக்கு யாராவது ஏதாவது சொன்னால் என்னிடம் கொண்டுவா; அவன் உன்னை மறுபடியும் தொந்தரவு செய்யமாட்டான்” என்றான்.
11
தொடர்ந்து அவள், “இரத்தப்பழிவாங்குகிறவன் அழிவுடன் அழிவைக் கூட்டாமல் தடுக்கும்படி, அரசர் தம் இறைவனாகிய யெகோவாவை வேண்டிக்கொள்வாராக. அப்பொழுது என் மகன் சாகமாட்டான்” என்றாள். அதற்கு தாவீது அரசன் அவளிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் உன் மகனின் தலைமயிரில் ஒன்றாவது தரையில் விழாது என்பதும் நிச்சயம்” என்றான்.
Settings