2 இராஜாக்கள் 9:24-37
24
ஆனால் யெகூ தன் வில்லை வளைத்து யோராமின் தோள்களுக்கிடையில் எய்தான். அம்பு அவனுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றதும் அவன் தன் தேரிலேயே விழுந்தான்.
25
அப்பொழுது யெகூ தனது அதிகாரியாகிய பித்காரிடம், “அவனை எடுத்து யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் எறிந்துவிடு. முன்பு ஒரு நாள் நானும் நீயும் இவனுடைய தகப்பனான ஆகாபுக்குப் பின்னால் தேரில் போகும்பொழுது, யெகோவா இவனைக் குறித்துச் சொன்ன இறைவாக்கை ஞாபகப்படுத்திக்கொள்.
26
அன்று யெகோவா, ‘நேற்று நான் நாபோத்தின் இரத்தத்தையும், அவன் மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் என்று அறிவிக்கிறார். இதே நிலத்தில் உன்னையும் நான் பழிவாங்குவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்று ஆகாபுக்குக் கூறியிருந்தார். ஆகவே இப்போது இவனைத் தூக்கி யெகோவாவின் வாக்குப்படி அந்தத் தோட்டத்தில் எறிந்துவிடு” என்று சொன்னான்.
27
யூதாவின் அரசனான அகசியா நடந்தவற்றைக் கண்டபோது, பெத்ஹாகானுக்குப் போகும் பாதையில் தப்பி ஓடினான். யெகூ அவனையும் கொல்லுங்கள் என்று பலமாகக் கத்திக்கொண்டு அவனைத் துரத்திப் போனான். இப்லேயாமுக்கு அருகே உள்ள கூருக்கு ஏறிப்போகும் சரிவான பாதையில் அகசியாவை அவனுடைய தேரிலேயே வைத்து யெகூவின் படையினர் காயப்படுத்தினார்கள். ஆயினும் அவன் மெகிதோவுக்குத் தப்பி ஓடிப்போய் அங்கே இறந்தான்.
28
அவனுடைய வேலையாட்கள் அவனின் உடலை தேரில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோய் தாவீதின் நகரத்திலிருந்த அவனுடைய முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்.
29
ஆகாபின் மகன் யோராமின் ஆட்சியின் பதினோராம் வருடத்தில் அகசியா யூதாவின் அரசனாகியிருந்தான்.
30
யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் கண்களுக்கு மை பூசி தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னலருகே பார்த்துக்கொண்டு நின்றாள்.
31
யெகூ வாசலுக்கு வந்தபோது யேசபேல் அவனைப் பார்த்து, “கொலைகாரனே! தன் எஜமானைக் கொலைசெய்த சிம்ரியைப் போன்றவனே! சமாதானத்துடன் வருகிறாயா” என்று கேட்டாள்.
32
யெகூ மேலே நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்து, “எனக்குச் சார்பாக இருப்பவர்கள் யார்?” என்றான். இரண்டு மூன்று அதிகாரிகள் வெளியே அவனை எட்டிப் பார்த்தார்கள்.
33
அப்பொழுது யெகூ அவர்களிடம், “அவளைத் தூக்கி கீழே எறிந்துவிடுங்கள்” என்றான். அவர்கள் அவளைக் கீழே எறிந்தார்கள். அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது. யெகூ அவளுக்கு மேலாக தேரைச் செலுத்தினான்.
34
அவன் உள்ளே போய் சாப்பிட்டுக் குடித்து, “இந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்” என்று கூறினான்.
35
ஆனால் அவளை அடக்கம்பண்ணுவதற்குப் போனபோது அவளுடைய மண்டையோட்டையும், கால்களையும், கைகளையும் தவிர வேறெதையும் காணவில்லை.
36
அவர்கள் திரும்பிப்போய் அதை யெகூவுக்கு அறிவித்தபோது அவன் பதிலாக, “திஸ்பிய ஊரைச்சேர்ந்த யெகோவாவின் பணியாளன் எலியாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் யேசபேலின் சதையை நாய்கள் தின்னும்.
37
யேசபேலின் உடல் யெஸ்ரயேல் நிலத்தின் வயல்வெளியின் எருவைப்போல கிடக்கும். அதைப் பார்க்கும் யாரும், ‘அது யேசபேல்’ என்று கூற முடியாமலிருக்கும் என்று சொல்லியிருந்தாரே” என்றான்.
Settings