Skip to content
2 நாளாகமம் 29:27-36

2 நாளாகமம் 29:27-36

27
எசேக்கியா பலிபீடத்தின்மேல் தகன காணிக்கைகளைப் பலியிடும்படி கொடுத்தான். காணிக்கை செலுத்தத் தொடங்கியவுடனே, எக்காளங்களுடனும் இஸ்ரயேலின் அரசன் தாவீதின் இசைக் கருவிகளுடனும் யெகோவாவுக்கான துதிபாடல்களும் ஆரம்பித்தன.
28
தகன காணிக்கை செலுத்துமட்டும் பாடகர் பாட, எக்காளம் முழங்க, சபையோர் எல்லோரும் தலைகுனிந்து வழிபட்டார்கள்.
29
பலிசெலுத்தி முடிவடைந்ததும் அரசனும் அவனுடன் வந்திருந்த எல்லோரும் தரையில் முழங்காற்படியிட்டு வழிபட்டார்கள்.
30
அரசன் எசேக்கியாவும், அவனுடைய அதிகாரிகளும், தாவீதும், தரிசனக்காரனான ஆசாப்பும் பாடிய வார்த்தைகளால் யெகோவாவைத் துதிக்கும்படி லேவியர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் துதித்து பாடி தலைகுனிந்து வழிபட்டார்கள்.
31
அப்பொழுது எசேக்கியா, “நீங்கள் இப்பொழுது உங்களை யெகோவாவுக்கென்று அர்ப்பணித்திருக்கிறீர்கள். வாருங்கள், பலிகளையும் நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். எனவே கூடியிருந்தவர்கள் பலிகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் யாருடைய இருதயம் ஏவப்பட்டதோ அவர்கள் சர்வாங்க தகன காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்.
32
சபையோர் கொண்டுவந்த தகன காணிக்கைகளின் எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு செம்மறியாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவாகும். இவையெல்லாம் யெகோவாவுக்காகத் தகன காணிக்கையாகக் கொண்டுவரப்பட்டன.
33
பலிகளாக அர்ப்பணிக்கப்பட்ட மிருகங்களின் தொகை அறுநூறு காளைகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளுமாகும்.
34
ஆனால் தகன காணிக்கைக்கான மிருகங்களைத் தோல் உரிப்பதற்கு ஆசாரியர்கள் மிகக் குறைவாகவேயிருந்தனர். மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தும் வரைக்கும் அவர்கள் உறவினர்களான லேவியர்கள் அந்த வேலை முடியும்வரைக்கும் உதவிசெய்தனர். ஏனெனில் லேவியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் ஆசாரியர்களைவிட கவனமுள்ளவர்களாக இருந்தனர்.
35
இவ்வாறு தகன காணிக்கைகள் ஏராளமாயிருந்தன; அத்துடன் சமாதான காணிக்கைகளின் கொழுப்பும், சமாதான காணிக்கைகளோடு செலுத்தப்பட்ட பான காணிக்கைகளும் ஏராளமாய் இருந்தன. எனவே யெகோவாவினுடைய ஆலய ஆராதனை திரும்பவும் நிலைநிறுத்தப்பட்டது.
36
இறைவன் தனது மக்களுக்காய் செய்து முடித்ததைக்குறித்து எசேக்கியாவும் எல்லா மக்களும் அகமகிழ்ந்தனர். ஏனெனில் இது மிகவும் விரைவாய் செய்யப்பட்டது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options