2 நாளாகமம் 20:20-30
20
அதிகாலையில் அவர்கள் தெக்கோவா பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனபோது, யோசபாத் எழுந்து நின்று, “யூதா, எருசலேம் மக்களே! எனக்கு செவிகொடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வையுங்கள், நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்; அவரது இறைவாக்கினர்களை நம்புங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று சொன்னான்.
21
மக்களுடன் ஆலோசனை பண்ணிய பின்பு யோசாபாத் யெகோவாவுக்கு பாடல்களைப் பாடவும், அவரது பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் பாடகரை நியமித்தான். படைக்கு முன்னால் சென்று: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பாடும்படி நியமித்தான்.
22
அவர்கள் பாடவும், துதிக்கவும் தொடங்கிய உடனே யூதாவுக்கு எதிராய் வந்திருந்த அம்மோன், மோவாப், சேயீர் மலைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த மனிதருக்கெதிராக யெகோவா தீடீர்த் தாக்குதல்களை ஏற்படுத்தினார். அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
23
அம்மோன், மோவாப் மனிதர்களும் சேயீர் மலைநாட்டு மனிதரை அழித்து நாசப்படுத்தும்படி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். சேயீர் மனிதர்களைக் கொலைசெய்து முடித்தபின்பு அவர்கள் ஒருவரையொருவர் அழித்தார்கள்.
24
யூதாவின் மக்கள் பாலைவனத்திற்கு எதிராய் இருக்கிற இடத்திற்கு வந்து இந்தப் பெரிய படையினர் பக்கமாய் பார்த்தபோது, அங்கே பிரேதங்கள் மட்டுமே தரையில் கிடப்பதைக் கண்டார்கள். ஒருவனும் தப்பியிருக்கவில்லை.
25
எனவே யோசபாத்தும், அவன் மனிதர்களும் கொள்ளைப்பொருளை எடுத்து வருவதற்காக அங்கே சென்றார்கள். அங்கே அவர்கள் பெரும் தொகையான உபகரணங்களையும், உடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கண்டார்கள். அவை எடுத்துக் கொண்டுபோக முடியாத அளவு அதிகமாயிருந்தன. கொள்ளைப்பொருள் அதிகமாயிருந்தபடியால், அவற்றைச் சேர்த்தெடுக்க மூன்றுநாள் பிடித்தது.
26
அவர்கள் நாலாம் நாளில் பெராக்கா பள்ளத்தாக்கிலே ஒன்றுகூடி அங்கே யெகோவாவைத் துதித்தார்கள். அதனால் அது இன்றுவரை பெராக்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
27
அதன்பின் யூதா, எருசலேம் மனிதர்கள் எல்லோரும் யோசபாத்தின் தலைமையின்கீழ் மகிழ்ச்சியுடன் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஏனெனில் தங்கள் பகைவர்களை மேற்கொண்டு சந்தோஷமாயிருக்கும்படி யெகோவா செய்தார்.
28
அவர்கள் எருசலேமுக்குள் போய் யாழ்களோடும், வீணைகளோடும், எக்காளங்களோடும் யெகோவாவினுடைய ஆலயத்திற்கு போனார்கள்.
29
இஸ்ரயேலின் பகைவர்களோடு யெகோவா எப்படி யுத்தம் செய்தார் என மற்ற நாட்டு அரசுகள் கேள்விப்பட்டபோது, இறைவனைப்பற்றிய பயம் அவர்கள்மேல் வந்தது.
30
யோசபாத்தின் அரசு சமாதானத்துடன் இருந்தது. ஏனெனில் அவனுடைய இறைவன் எல்லாப் பக்கத்திலும் அவனுக்கு அமைதியைக் கொடுத்திருந்தார்.
Settings