1 சாமுயேல் 25:18-31
18
உடனே அபிகாயில் தாமதிக்கவில்லை; அவள் இருநூறு அப்பங்களையும், இரண்டு தோல் குடுவைகளில் திராட்சை இரசத்தையும், தோல் உரித்த ஐந்து செம்மறியாடுகளையும், ஐந்துபடி அளவு வறுத்த தானியத்தையும், நூறு திராட்சை அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து அவற்றைக் கழுதைகள்மேல் ஏற்றினாள்.
19
அவள் தன் பணியாட்களிடம், “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னே வருகிறேன்” என்றாள். ஆனாலும் தன் கணவன் நாபாலுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
20
இவ்வாறு அவள் கழுதைமேல் ஏறி மலையின் கணவாய்க்கு வந்தபோது, தாவீதும், அவன் ஆட்களும் அவளை நோக்கி இறங்கிவந்தார்கள். அவள் அவர்களைச் சந்தித்தாள்.
21
தாவீது தன் மனிதரிடம், “இந்த பாலைவனத்திலே இவனுடைய உடமைகளில் ஒன்றேனும் தொலைந்துபோகாமல் அவற்றை நான் பாதுகாத்தது வீணாயிற்று. அவனோ எனக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்திருக்கிறான்” என்று அப்பொழுதுதான் சொல்லியிருந்தான்.
22
“அவனுக்குச் சொந்தமான எல்லா ஆண்களிலும் ஒருவனையாவது பொழுது விடியும் முன் உயிரோடு விட்டேனேயானால், இறைவன் தாவீதை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்றும் சொல்லியிருந்தான்.
23
அபிகாயில் தாவீதைக் கண்டதும் தனது கழுதையை விட்டு விரைவாக இறங்கி தாவீதுக்கு முன்னால் தரையை நோக்கிக் குனிந்து வணங்கினாள்.
24
அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து அவனிடம், “ஐயா இந்தக் குற்றம் என்மேல் மட்டுமே சுமரட்டும். உம்முடைய அடியவளை உம்மிடம் பேசவிடும். உமது அடியவள் சொல்ல இருப்பதைக் கேளும்.
25
என் எஜமானே! அந்தக் கொடுமையான மனிதன் நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். அவர் தன் பெயருக்கேற்றபடி மூடராயிருக்கிறார். மூடத்தனமே அவரோடு இருக்கின்றது. உமது அடியாளாகிய நானோ நீர் அனுப்பிய பணியாட்களைச் சந்திக்கவில்லை.
26
இப்பொழுது, என் ஆண்டவனே, நீர் இரத்தத்தைச் சிந்தாமலும், உம்முடைய கையினால் பழிவாங்காமலும் யெகோவா உம்மைத் தடுத்திருக்கிறார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், உம் பகைவரும், உமக்குத் தீங்குசெய்ய நோக்கம் கொண்டிருக்கிறவர்களும் நாபாலைப்போல் இருப்பார்களாக.
27
உமது அடியவள் எனது எஜமானுக்குக் கொண்டுவந்திருக்கும் அன்பளிப்பு உம்மைப் பின்பற்றும் மனிதருக்குக் கொடுக்கப்படட்டும்.
28
“தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும்.
29
ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார்.
30
யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார்.
31
அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள்.
Settings