Skip to content
1 இராஜாக்கள் 10:14-29

1 இராஜாக்கள் 10:14-29

14
ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள் இருந்தன.
15
இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும், எல்லா அரபு நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் தங்கம் கொண்டுவந்தார்கள்.
16
சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
17
அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்று மினா தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான்.
18
அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதைத் தரமான தங்கத்தகட்டால் மூடினான்.
19
அந்த அரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அதன்பின் பக்கத்தில் வட்ட வடிவமான உச்சி இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது.
20
ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை.
21
சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது.
22
அரசனுக்கு கடலில் ஈராமின் கப்பல்களுடன் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
23
பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான்.
24
முழு உலகத்தாரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள்.
25
வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், ஆடைகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
26
சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் ஆயிரத்து நானூறு தேர்களும், பன்னிரண்டாயிரம் குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
27
அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான்.
28
சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும், சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள்.
29
எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options