Skip to content
1 கொரிந்தியர் 11:23-34

1 கொரிந்தியர் 11:23-34

23
கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்ததையே நான் உங்களுக்குக் கொடுத்தேன்: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து,
24
நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.
25
அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; இதை நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.
26
ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தைச் சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், கர்த்தர் திரும்ப வருமளவும், அவருடைய மரணத்தை பிரசித்தம் பண்ணுகிறீர்கள்” என்றார்.
27
ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான்.
28
எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
29
ஏனெனில், ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான்.
30
இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள்.
31
ஆகவே, நம்மை நாமே நியாயந்தீர்த்துக்கொண்டால், நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டோம்.
32
அப்படியிருந்தும், நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படமாட்டோம்.
33
ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
34
யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options