1 நாளாகமம் 17:7-15
7
“இப்பொழுது எனது அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஆளுநனாயிருக்கும்படி வயல்வெளியின் ஆடுகளை மேய்ப்பதிலிருந்தும் உன்னைத் தெரிந்தெடுத்தேன்.
8
நீ போன இடமெல்லாம் உன்னோடுகூட நான் இருந்தேன். நான் உனது எல்லாப் பகைவர்களையும் உனக்கு முன்பாக வெட்டிப் போட்டேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன்.
9
அதோடு எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பேன். அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கும்படியும், அவர்கள் இனி அலையாமலும் நான் அவர்களை நிலைநாட்டுவேன். தொடக்கத்தில் செய்ததுபோல் கொடியவர்கள் இனி ஒருபோதும் அவர்களை ஒடுக்கமாட்டார்கள்.
10
இஸ்ரயேல் மக்களுக்கு மேலாக நான் தலைவர்களை நியமித்த காலந்தொடங்கி நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். நான் உனது பகைவர்கள் எல்லோரையும் அடக்குவேன். “ ‘அத்துடன், யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என அறிவிக்கிறேன்:
11
உனது காலம் முடிந்து நீ உனது முற்பிதாக்களுடன் சேரும்போது, உனது சந்ததியில் ஒருவனை எழுப்பி உனது சொந்த மகன் ஒருவனுக்கு உனது அரியணையைக் கொடுப்பேன். நான் அவனுடைய அரசாட்சியை நிலைநிறுத்துவேன்.
12
அவனே எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; நான் அவனுடைய அரியணையை என்றென்றும் நிலைக்கப்பண்ணுவேன்.
13
நான் அவனுடைய தகப்பனாயிருப்பேன்; அவன் எனது மகனாயிருப்பான். உனக்குமுன் ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, நான் எனது அன்பை ஒருபோதும் அவனைவிட்டு அகற்றமாட்டேன்.
14
நான் அவனை என் ஆலயத்திலும், என் அரசாட்சியிலும் என்றென்றைக்குமாக அமர்த்துவேன்; அவனுடைய அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.’ ”
15
இவ்வாறு நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா வெளிப்படுத்தலின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
Settings