God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அவ்வாறு நடந்தால் நீங்கள் அந்த தீர்க்கதரிசியின் வார்த்தைகளையோ, கனவு காண்பவனின் வார்த்தைகளையோ கேட்கக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் தம்மில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு கூருகிறீர்களோ என்று அறியும்படி உங்களைப் சோதிக்கிறார்.
ஆகையால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே பின்பற்றவேண்டும், அவரிடத்திலேயே பயபக்தியாயிருக்கவேண்டும். அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவருக்குப் பணிசெய்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த தீர்க்கதரிசியையோ அல்லது கனவு காண்பவனையோ கொலைசெய்யாமல் விடவேண்டாம். ஏனெனில், அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டு வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக அவன் கலகத்தை மூட்டும்படி பிரசங்கித்தான். உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் பின்பற்றும்படி கட்டளையிட்ட வழியிலிருந்து, உங்களை விலகச்செய்ய அவன் முயற்சித்தான். அந்த தீமையை நீங்கள் உங்கள் மத்தியிலிருந்து அகற்றிவிடவேண்டும்.
அவன் சாகும்படி அவன்மேல் கற்களை எறியுங்கள். ஏனெனில் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டு வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து உங்களை விலகச்செய்ய அவன் முயற்சித்தான்.
நீங்கள் வாழும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றைப்பற்றி, இவ்வாறு சொல்லப்பட்டதாகக் கேள்விப்படலாம்.
பட்டணத்தின் கொள்ளைப்பொருட்களை ஒன்றுசேர்த்து, பட்டணத்தின் மத்தியிலுள்ள பொதுச் சதுக்கத்தில்போட்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கையாக அப்பட்டணத்தையும், கொள்ளையிட்ட யாவையும் நெருப்பினால் முற்றிலும் எரிக்கவேண்டும். அப்பட்டணம் ஒருபோதும் திரும்பவும் கட்டப்படாமல் என்றென்றும் பாழடைந்து கிடக்கவேண்டும்.
அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட கொள்ளைப்பொருள்கள் ஒன்றுமே உங்கள் கைகளில் காணப்படக்கூடாது. அப்பொழுது யெகோவா தம்முடைய கடுங்கோபத்தை விட்டு விலகி, உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள்மேல் இரக்கங்கொண்டு, கருணைகாட்டி, உங்கள் எண்ணிக்கையைப் பெருகச்செய்வார்.
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறபடியினாலேயே அவ்வாறு செய்வார்.
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பிள்ளைகள். ஆகவே நீங்கள் இறந்தவர்களுக்காக உங்களை வெட்டிக்கொள்ளவோ, தலைகளின் முன்பக்கத்தைச் சிரைக்கவோவேண்டாம்.
நீங்களே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். அவர் பூமியின் மீதுள்ள எல்லா மக்களிலும் உங்களையே தமக்கு அருமையான உரிமைச்சொத்தாய் இருக்கும்படி தெரிந்தெடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே இறந்து கிடக்கிறதாக நீங்கள் காணும் எதையும் சாப்பிடவேண்டாம். உங்கள் பட்டணங்களில் ஒன்றில் வாழும் அந்நியனுக்கு அவற்றைக்கொடுங்கள், அவன் சாப்பிடட்டும் அல்லது வேறு நாட்டவனுக்கு விற்றுவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள் நீங்களே. வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்கவேண்டாம்.
உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கையும் மாட்டு மந்தை, ஆட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றையும், உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும் வசிப்பிடமாக தெரிந்துகொள்ளும் இடத்தில் அவருக்கு முன்பாக சாப்பிடுங்கள். அப்பொழுது நீங்கள் எப்பொழுதும் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பயபக்தியாயிருக்கக் கற்றுக்கொள்வீர்கள்.
யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் தூரமாய் இருக்கலாம். அவ்வாறு தூரமாய் இருப்பதினால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் பத்திலொரு பங்கைச் சுமந்துகொண்டு அங்குபோக உங்களால் முடியாதிருக்கலாம்.
அப்பொழுது உங்கள் பத்திலொரு பங்கை வெள்ளிக்கு பதிலீடுசெய்து, அந்த வெள்ளியை உங்களுடன் எடுத்துக்கொண்டு உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்துக்குப் போங்கள்.
அங்கேபோய், அந்த வெள்ளிக்கு செம்மறியாடுகளையோ மாடுகளையோ திராட்சை இரசத்தையோ அல்லது மதுபானத்தையோ நீங்கள் விரும்பும் எதையும் வாங்குங்கள். பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீங்களும், உங்கள் வீட்டாரும் அவற்றைச் சாப்பிட்டுக் களிகூருங்கள்.
இவற்றில், தங்களுக்குச் சொந்தமான நிலப்பங்கும், உரிமைச்சொத்தும் இல்லாமல் உங்கள் பட்டணத்தில் வாழும் லேவியரும், அந்நியரும், தகப்பன் இல்லாதவர்களும், விதவைகளும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதிப்பார்.
நீங்கள் செய்யவேண்டிய விதம் இதுவே: கடன்களை ரத்துச்செய்வதற்கான யெகோவாவின் வேளை அறிவிக்கப்பட்டிருப்பதால், தன் சகோதர இஸ்ரயேலனுக்கு கடன்கொடுத்த எவனும், அந்தக்கடனை தள்ளுபடிசெய்யவேண்டும். அவன் அந்த இஸ்ரயேலனிடமிருந்தோ அல்லது சகோதரனிடமிருந்தோ கடனைத் திருப்பித்தரும்படி கேட்கக்கூடாது.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலே, உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். அதனால் உங்கள் மத்தியில் ஏழைகள் இருக்கக்கூடாது.
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முற்றிலும் கீழ்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் இந்த எல்லா கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருந்தால்மட்டுமே, அப்படி ஆசீர்வதிப்பார்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால் நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுப்பீர்கள். நீங்களோ ஒருவரிடமிருந்தும் கடன் வாங்கமாட்டீர்கள். நீங்கள் நாடுகளை ஆளுவீர்கள். ஆனால் உங்களை ஒருவரும் ஆளமாட்டார்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள பட்டணங்கள் ஒன்றில், உங்கள் சகோதரருக்குள் ஏழை ஒருவன் இருந்தால், அந்த ஏழைச் சகோதரனிடத்தில் இருதயக் கடினத்துடனோ, சுயதன்மையுடனோ நடந்துகொள்ளாதீர்கள்.
விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதனால் தேவையுள்ள சகோதரனுக்குக் கரிசனை காட்டாமலும், ஒன்றும் கொடுக்காமலும் விடவேண்டாம். அப்படியான கொடிய எண்ணம் உங்களுக்கு வராதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் யெகோவாவிடம் உங்களுக்கு எதிராக முறையிடும்பொழுது நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகளாகக் கணிக்கப்படுவீர்கள்.
மனம்கோணாமல் அவனுக்குத் தாராளமாய்க் கொடுங்கள். அப்பொழுது இதன் நிமித்தம் இறைவனாகிய யெகோவா, உங்கள் முயற்சிகள் யாவற்றையும் நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
உங்கள் மந்தையிலும், உங்கள் சூடடிக்கும் களத்திலும், உங்கள் திராட்சை ஆலையிலும் இருந்து எடுத்துத் தாராளமாய்க் கொடுத்து அனுப்புங்கள். உங்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படி அவனுக்குக்கொடுங்கள்.
நீங்கள் எகிப்திலே அடிமையாய் இருந்ததையும், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை மீட்டதையும் நினைவுகூருங்கள். ஆகவேதான் நான் இன்று இந்த கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.