Skip to content
ரூத் 4:7-12

ரூத் 4:7-12

7
இஸ்ரயேலில் முற்காலத்திலிருந்து வரும் வழக்கப்படி, மீட்கிறதிலும், சொத்துரிமையை மாற்றுகிறதிலும் அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ஒருவன் தன் செருப்பைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ரயேலில் சொத்து மாற்றங்களைச் சட்டபூர்வமாக்கும் முறைமையாயிருந்தது.
8
எனவே மீட்கும் உரிமையுடைய உறவினன் போவாஸிடம், “நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொல்லி தன் செருப்பைக் கழற்றிப் போட்டான்.
9
அப்பொழுது போவாஸ் அங்கிருந்த பெரியோரையும், மக்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னதாவது, “இன்று நான் எலிமெலேக்கிற்கும் அவன் பிள்ளைகளான கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்கும் உரிய உடைமைகள் யாவற்றையும் நகோமியிடமிருந்து வாங்கிவிட்டேன் என்பதற்கு, நீங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான்.
10
“மக்லோனின் மனைவியாயிருந்த ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் நான் என் மனைவியாக, எனக்கு உரிமையாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு இறந்தவனுடைய பெயரை அவனுடைய சொத்துடன் அழியாமல் பராமரிப்பேன். இவ்விதமாக அவனுடைய பெயர் குடும்பத்தின் மத்தியிலிருந்தோ, அல்லது பட்டணத்தின் பதிவேடுகளிலிருந்தோ அழிந்துபோகாதிருக்கும். இதற்கு இன்று நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான்.
11
அப்பொழுது முதியவர்களும், பட்டண வாயிலிலிருந்த மற்றெல்லோரும் அவனிடம் சொன்னதாவது: “ஆம்! நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். உன் வீட்டிற்கு மனைவியாக வரப்போகிற இப்பெண்ணை யெகோவா, இஸ்ரயேலின் வீட்டைக் கட்டியெழுப்பிய ராகேலைப்போலவும், லேயாளைப்போலவும் ஆக்குவாராக! எப்பிராத்தில் செல்வந்தனாயிருந்து, பெத்லெகேமிலே பெயர் பெற்றிருப்பாயாக.
12
இந்த இளம்பெண் வழியாக யெகோவா உனக்குக் கொடுக்கவிருக்கும் சந்ததியினரால் உன் குடும்பம் தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பேரேஸின் குடும்பத்தைப்போல் இருப்பதாக!” என வாழ்த்தினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options