ரோமர் 4:1-10
1
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?
2
உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை.
3
வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”
4
வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி.
5
ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
6
இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது,
7
“தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
8
ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான்.
9
இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம்.
10
அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது.
Settings