Skip to content
வெளிப்படுத்தல் 2:18-29

வெளிப்படுத்தல் 2:18-29

18
“தியத்தீரா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் கண்கள் இருக்கிறவரும், துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போல் பாதங்கள் இருக்கிற இறைவனுடைய மகனின் வார்த்தைகள் இவையே:
19
உன்னுடைய செயல்கள், அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன்னுடைய விடாமுயற்சி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன்.
20
ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: தன்னுடைய போதனையினாலே என்னுடைய ஊழியர்களைத் தவறாய் வழிநடத்தி, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து, விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைச் சாப்பிடும்படியும் செய்து தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிற யேசபேல் என்ற அந்தப் பெண்ணை நீ அனுமதிக்கிறாய்.
21
அவள் தன்னுடைய முறைகேடான பாலுறவுகளிலிருந்து மனந்திரும்புகிறதற்கு அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை.
22
ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன்.
23
நான் அவளுடைய பிள்ளைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது இருதயங்களையும், மனங்களையும் ஆராய்கிறவர் நானே என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் ஏற்றவிதமாக, நான் உங்களுக்குப் பதில் செய்கிறவர் என்றும் எல்லா திருச்சபைகளும் அறிந்துகொள்ளும்.
24
அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாமல், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிற காரியங்களை கற்றுக்கொள்ளமல் தியத்தீரா பட்டணத்திலிருக்கிற மற்றவர்களாகிய ‘உங்களுக்கு நான் கட்டளையிடுவதாவது நான் வரும்வரை, உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள்.
25
உங்கள்மேல் இதைத்தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்தமாட்டேன்.’
26
வெற்றி பெறுகிறவர்களாய் முடிவுவரை என்னுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றதுபோலவே, நான் நாடுகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27
‘அவர் நாடுகளை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மண்பாண்டங்களைப்போல நொறுக்கிப்போடுவார்’ என்ற வாக்குத்தத்தத்தின்படி,
28
நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.
29
பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options