வெளிப்படுத்தல் 10:1-7
1
பின்பு இன்னொரு வல்லமையுள்ள இறைத்தூதன் பரலோகத்திலிருந்து கீழே வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக, ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன.
2
அவன் ஒரு திறந்த சிறிய புத்தகச்சுருளைத் தனது கையில் வைத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வலதுகாலைக் கடலிலும், தன்னுடைய இடதுகாலைத் தரையிலும் ஊன்றி நின்று,
3
சிங்கத்தின் கர்ஜிப்பைப்போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்டபோது, ஏழு இடிமுழக்கங்கள் மறுமொழியாகச் சத்தமிட்டுப் பேசின.
4
அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபொழுது, நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன்; ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிகளும் சொன்னதை முத்திரையிடு, அதை எழுதவேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.
5
பின்பு கடலின்மேலும், தரையின்மேலும் நிற்கிறவனாக நான் கண்ட அந்தத் தூதன், தன்னுடைய வலதுகையை, பரலோகத்தை நோக்கி உயர்த்தினான்.
6
அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது!
7
ஏழாவது தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதப்போகிற நாட்களிலே, இறைவனுடைய இரகசியம் நிறைவேற்றப்படும். அவர் தம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினருக்கு அறிவித்தபடியே அவைகள் நிறைவேறும்” என்றான்.
Settings