பிலிப்பியர் 2:19-30
19
அன்றியும் தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவில் நான் எதிர்பார்க்கிறேன். அப்பொழுது அவன்மூலம் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உற்சாகமடைவேன்.
20
அவனைப்போல் உங்கள் சுகநலன்களில் உண்மையான கரிசனைக் கொள்வதற்கு அவனைத்தவிர வேறொருவனும் என்னிடம் இல்லை.
21
ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை.
22
ஆனால் தீமோத்தேயுவோ, ஒரு மகன் தன் தந்தையுடன் வேலையில் இருப்பதுபோல், என்னுடன் சேர்ந்து நற்செய்திப் பணியில் ஊழியம் செய்திருக்கிறான். இதன்மூலம், அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும்.
23
எனக்கு இங்கே என்ன நடக்கும் என்று நான் அறிந்தவுடனே, அவனை உங்களிடம் அனுப்பலாம் என எதிர்பார்க்கிறேன்.
24
நானும் உங்களிடம் விரைவில் வருவேன் என்று கர்த்தரில் மனவுறுதியாயிருக்கிறேன்.
25
ஆனால் இப்பொழுது என்னுடைய தேவைகளில் எனக்கு உதவிசெய்யும்படி நீங்கள் அனுப்பிய உங்கள் தூதுவனான எப்பாப்பிராத்துவைத் திரும்பவும் உங்களிடம் அனுப்புவது அவசியம் என எண்ணுகிறேன். அவன் என் சகோதரனும் உடன் ஊழியனும், என் உடனொத்த போர் வீரனுமாயிருக்கிறான்.
26
அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாயிருக்கிறான். தான் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதினால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான்.
27
அவன் நோயினால் சாகும் தருவாயில் இருந்தது உண்மையே. ஆனால் இறைவன் அவன்மேல் இரக்கம் கொண்டார். அவனில் மட்டும் அல்ல, துக்கத்தின்மேல் துக்கம் எனக்கும் வராமல் அவர் என்மேலும் இரக்கம் கொண்டார்.
28
ஆகையால், நீங்கள் மீண்டும் அவனைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி, அவனை அனுப்புவதற்கு நான் மிகவும் ஆவலாய் இருக்கிறேன். அப்பொழுது என் கவலை குறையும்.
29
எனவே, அவனைக் கர்த்தரில் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக்கொள்ளுங்கள். இவனைப் போன்றவர்களுக்கு அதிக மதிப்புக்கொடுங்கள்.
30
ஏனெனில் உங்களால் எனக்கு செய்யமுடியாத உதவியை, அவன் எனக்குச் செய்யும்படி, தனது உயிரையும் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு, கிறிஸ்துவின் ஊழியத்திற்காக சாகவும் தயங்கவில்லை.
Settings