மீகா 1:2-7
2
மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள், பூமியே, அதில் உள்ளவர்களே, செவிகொடுங்கள், ஆண்டவராகிய யெகோவா உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகிறார், யெகோவா பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகிறார்.
3
நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார். அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார்.
4
நெருப்பின் முன் மெழுகு போலவும், மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும் மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன. பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன.
5
யாக்கோபின் மீறுதல்களினாலும், இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன. யாக்கோபின் மீறுதல் என்ன? சமாரியா அல்லவா? யூதாவின் வழிபாட்டு மேடை எது? எருசலேம் அல்லவா?
6
“எனவே யெகோவா சொல்கிறதாவது: நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன். திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன். அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன்.
7
சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும் துண்டுகளாய் நொறுக்கப்படும்; அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம் நெருப்பில் சுட்டெரிக்கப்படும்; அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன். அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால், பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.”
Settings