Hoppa till innehåll
மாற்கு 7:1-23

மாற்கு 7:1-23

1
ஒரு நாள் பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலரும் எருசலேமிலிருந்து ஒன்றாய் வந்து, இயேசுவைச் சுற்றி நின்றார்கள்.
2
இயேசுவின் சீடர்களில் சிலர் முறைப்படி கை கழுவாமல், அசுத்தமான கைகளினால் உணவு சாப்பிடுவதை அவர்கள் கண்டார்கள்.
3
பரிசேயரும், யூதர் எல்லோரும் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி, கைகளைக் கழுவினாலன்றி சாப்பிடமாட்டார்கள்.
4
சந்தைகூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை. அது தவிர குவளைகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக பாரம்பரிய முறைகளையும் கைக்கொண்டார்கள்.
5
எனவே பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி நடந்து கொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் ‘அசுத்தமான’ கைகளினால் உணவு சாப்பிடுகிறார்களே” என்றார்கள்.
6
அதற்கு இயேசு பதிலாக, “வேஷக்காரராகிய உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்; அவர் எழுதியிருக்கிறதாவது: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.
7
அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே.’
8
நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, மனிதரின் பாரம்பரிய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
9
மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக, இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள்.
10
ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தனது தகப்பனையோ தாயையோ சபித்தால் அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.
11
ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள்.
12
அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
13
இவ்விதமாய், நீங்கள் கைக்கொண்டுவரும் பாரம்பரிய முறையினால், இறைவனுடைய வார்த்தையை செல்லாததாக்குகிறீர்கள். அத்துடன், நீங்கள் இவ்விதமான பல காரியங்களையும் செய்கிறீர்கள்” என்றார்.
14
மேலும், இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுத்து, இதை விளங்கிக்கொள்ளுங்கள்.
15
மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும், அவனுக்குள்ளே போவதினால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால், மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறவைகளே, அவனை அசுத்தப்படுத்துகின்றன.
16
கேட்கிறதற்குக் காதுகளுள்ளவன் கேட்கட்டும்” என்று கூறினார்.
17
பின் மக்கள் கூட்டத்தைவிட்டு, அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
18
அவர் அவர்களிடம், “நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்களோ? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகிறவை, அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா?
19
ஏனெனில், அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல், அவனுடைய வயிற்றுக்குள் போய், அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது” என்றார். இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களும் சுத்தமானது என்று அறிவித்தார்.
20
இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’
21
ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை,
22
விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன;
23
தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options