லூக்கா 3:1-6
1
ரோம பேரரசன் திபேரியு சீசரது ஆட்சியின் பதினைந்தாவது வருடத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநனாக இருந்தான். அக்காலத்தில் ஏரோது கலிலேயாவை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அவனது சகோதரன் பிலிப்பு இத்துரேயா, திராகொனித்து ஆகிய பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். லிசானியா என்பவன் அபிலேனே பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான்.
2
அக்காலத்தில் அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராய் இருந்தார்கள். அப்பொழுது பாலைவனத்தில் இருந்த சகரியாவின் மகன் யோவானுக்கு இறைவனுடைய வார்த்தை வந்தது.
3
அவன் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறம் எங்கும் சென்று, மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
4
இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் இது நடந்தது: “பாலைவனத்தில் கூப்பிடுகிற ஒருவனின் குரல் கேட்கிறது, ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்.
5
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும். கோணலான வீதிகள் நேராகும், கரடுமுரடான வழிகள் சீராகும்.
6
மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”
Settings