Skip to content
யோசுவா 9:17-27

யோசுவா 9:17-27

17
எனவே மூன்றாம் நாள் இஸ்ரயேலர் புறப்பட்டு ஏவியரின் பட்டணங்களான கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யாரீம் என்னும் பட்டணங்களை அடைந்தார்கள்.
18
ஆயினும் மக்கள் சமுதாயத் தலைவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், இஸ்ரயேலர் அந்நகரங்களைத் தாக்கவில்லை. இதனால் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைவர்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
19
ஆனால் தலைவர்கள் எல்லோரும் அதற்கு மறுமொழியாக: “நாங்கள் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் ஆணையிட்டுவிட்டோம். எனவே நாம் அவர்களை இப்பொழுது தொடமுடியாது.
20
மாறாக நாம் அவர்களுக்கு இப்படிச் செய்வோம். நாங்கள் அவர்களுக்கு அளித்த ஆணைப்படி வாக்குறுதியை மீறுவதனால் நம்மேல் இறைவனின் கோபம் ஏற்படாதபடிக்கு, அவர்களை நாம் வாழ உயிரோடு விட்டுவிடுவோம்.
21
அவர்கள் வாழட்டும்; அவர்கள் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினருக்கும் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருக்கட்டும்” என்றனர். இவ்வாறு தலைவர்களால் அவர்களுக்குக் கொடுத்த வாக்கு காப்பாற்றப்பட்டது.
22
பின் யோசுவா கிபியோனியரை தன்னிடம் வரச்செய்து அவர்களிடம், “நீங்கள் எங்களுக்கு அருகில் குடியிருந்துகொண்டு, வெகுதொலைவிலிருந்து வந்தவர்களெனக் கூறி ஏன் எங்களை ஏமாற்றினீர்கள்?
23
இப்பொழுது நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். இனிமேல் என் இறைவனின் ஆலயத்திற்கு நீங்கள் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருப்பீர்கள்; இவ்வேலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் நீங்கமாட்டீர்கள்” என்றான்.
24
அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா முழு நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், அங்குள்ள குடிகளை உங்களுக்கு முன்பாக அழிக்கவும், மோசேக்கு எவ்வாறு கட்டளையிட்டார் என்பதை, உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கேள்விப்பட்டோம். எனவே உங்கள் நிமித்தம் எங்கள் உயிருக்குப் பயந்தே இப்படிச் செய்தோம்.
25
இப்பொழுது நாங்கள் உமது கையிலேயே இருக்கிறோம். எது உமக்கு நல்லதாகவும், சரியாகவும் தோன்றுகிறதோ அதை எங்களுக்குச் செய்யும்” என்றார்கள்.
26
இவ்விதமாய் யோசுவா இஸ்ரயேலரிடமிருந்து கிபியோனியர்களைக் காப்பாற்றினான். இஸ்ரயேலர் அவர்களை அழிக்கவில்லை.
27
அவன் அன்றே கிபியோனியரை, இஸ்ரயேலின் மக்கள் சமுதாயத்திற்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் அமைக்கப்படும் பலிபீடத்திற்கும் விறகு வெட்டுபவர்களாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் நியமித்தான். இன்றுவரை அவர்கள் அவ்வாறே இருக்கிறார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options