Skip to content
எரேமியா 50:21-32

எரேமியா 50:21-32

21
மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். அவர்களை தொடர்ந்து சென்று, கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள்.
22
நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.
23
முழு பூமியையும் அடித்த சம்மட்டி இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. நாடுகளுக்குள் எவ்வளவாய் பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது?
24
பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய்.
25
யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். ஏனெனில் பாபிலோன் நாட்டில் ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு.
26
வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். ஒன்றும் மீந்திராதபடி அவளை முழுவதுமாக அழித்துவிடுங்கள்.
27
அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது.
28
பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். “எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள்.
29
வில்வீரர்களை அழைப்பியுங்கள். வில் வளைக்கும் யாவரையும் பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். அவளைச்சுற்றி முகாமிட்டு ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள்.
30
ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
31
“பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். “உன் நாள் வந்துவிட்டது; நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது.
32
அகங்காரி இடறி விழுவாள்; அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options