ஏசாயா 63:11-19
11
அப்பொழுது அவருடைய மக்கள் பூர்வ நாட்களையும், மோசேயையும், அவருடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்கள்; அவர்களை தனது மந்தையின் மேய்ப்பனுடன் தம் மக்களை கடல் வழியே கொண்டுவந்தவர் எங்கே? அவர்கள் மத்தியில் தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்பியவர் எங்கே?
12
தமது மகிமையான வல்லமையின் புயத்தால் மோசேயின் வலதுகையைக் கொண்டு, தமக்கு நித்திய புகழ் உண்டாக்கும்படியாக அவர்களுக்கு முன்பாக தண்ணீர்களைப் பிரித்தவர் எங்கே?
13
ஆழங்களில் அவர்களை வழிநடத்தியவர் எங்கே? பாலைவன வெளியில் செல்லும் குதிரையைப்போல அவர்கள் இடறவில்லை;
14
யெகோவாவின் ஆவியானவர் அவர்களை பள்ளத்தாக்கில் இறங்கிச் செல்லும் மந்தையைப்போல், இளைப்பாறப் பண்ணினார். நீர் உமக்கு மகிமையான பெயரை உண்டுபண்ணும்படி, உமது மக்களை இவ்வாறு வழிநடத்தினீர்.
15
பரலோகத்திலிருந்து கீழே நோக்கும், பரிசுத்தமும் மகிமையுமான உமது உயர்ந்த அரியணையிலிருந்து பாரும். உமது வைராக்கியமும் உமது வல்லமையும் எங்கே? உமது கனிவும் இரக்கமும் எங்களிடமிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றன.
16
ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரயேலும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், நீரே எங்கள் தந்தை; யெகோவாவே, நீர் நீரே எங்கள் தந்தை. பூர்வகாலம் முதல் எங்கள் மீட்பர் என்பதே உமது பெயர்.
17
யெகோவாவே, நீர் ஏன் எங்களை உமது வழிகளிலிருந்து விலகச் செய்கிறீர்? உமக்குப் பயபக்தியாயிராதபடி ஏன் எங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்? உமது உரிமையாயிருக்கும் கோத்திரங்களான உமது ஊழியரின் நிமித்தம் திரும்பி வாரும்.
18
உமது மக்கள் உமது பரிசுத்த இடத்தைச் சிறிது காலமே சுதந்தரித்திருந்தார்கள்; ஆனால் இப்பொழுதோ எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்த இடத்தை மிதித்து அழித்துவிட்டார்கள்.
19
பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே; ஆனால் நாங்களோ ஒருபோதும் உம்மால் ஆட்சி செய்யப்படாதவர்கள் போலவும், உமது பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாதவர்கள் போலவும் இருக்கிறோம்.
Settings