ஏசாயா 43:14-21
14
உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி, பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்; அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன்.
15
நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்; இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.”
16
கடலிலே ஒரு வழியையும், பெரு வெள்ளத்திலே ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே;
17
தேர்களையும் குதிரைகளையும், இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும், அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து, திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:
18
“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்; கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்.
19
இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் பாலைவனத்தில் பாதையையும், பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.
20
நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு பாலைவனத்தில் தண்ணீரையும், பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன். அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும் என்னை கனம்பண்ணும்.
21
இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி, எனக்காக நானே உருவாக்கினேன்.
Settings