ஏசாயா 22:1-11
1
தரிசனப் பள்ளத்தாக்கு எனப்படும் எருசலேமைக் குறித்த இறைவாக்கு: வீடுகளின்மேல் போய் இருக்கிறீர்களே, உங்களுக்கு நடந்தது என்ன?
2
குழப்பம் நிறைந்த நகரமே, ஆரவாரமும் குதூகலமும் உள்ள பட்டணமே, உங்களில் கொல்லப்பட்டவர்கள் வாளினால் கொல்லப்படவில்லை; அல்லது அவர்கள் போரில் சாகவில்லை.
3
உங்கள் தலைவர்கள் யாவரும் சேர்ந்து ஓடிவிட்டார்கள்; வில்லை நாணேற்றாமலே அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். பகைவன் வெகு தூரத்திலிருக்கும்போதே நீங்கள் தப்பி ஓடினீர்கள்; ஆயினும் நீங்கள் யாவரும் ஒன்றாய் பிடிக்கப்பட்டு கைதிகளாக்கப்பட்டீர்கள்.
4
ஆகவே நான், “என்னிடமிருந்து திரும்புங்கள்; என்னை மனங்கசந்து அழவிடுங்கள்; என் மக்களின் அழிவின் நிமித்தம் என்னைத் தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.
5
யெகோவா, சேனைகளின் யெகோவா, தரிசனப் பள்ளத்தாக்கிற்கு அமளிக்கும், மிதித்தலுக்கும், திகிலுக்கும் என்று ஒருநாளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அந்த நாளிலே மதில்கள் இடித்து வீழ்த்தப்படும்; மலைகளை நோக்கிக் கூக்குரலிடுவார்கள்.
6
ஏலாமியர் தமது தேரோட்டிகளோடும், குதிரைகளோடும் தமது அம்புக் கூடுகளை எடுக்கிறார்கள்; கீர் ஊரார் கேடயத்தை வெளியே எடுக்கிறார்கள்.
7
உங்கள் செழிப்பான பள்ளத்தாக்குகள் தேர்களினால் நிரம்பி இருக்கின்றன; பட்டணத்து வாசலிலே குதிரைவீரர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
8
யூதாவின் அரண்கள் அகற்றப்பட்டிருக்கின்றன; அந்த நாளிலே நீங்கள் வன மாளிகையின் ஆயுதங்களில் உங்கள் நம்பிக்கையை வைத்திருந்தீர்கள்.
9
தாவீதின் பட்டணத்து அரண்களில் பல வெடிப்புகளைக் கண்டீர்கள். நீங்கள் கீழ் குளத்தில் தண்ணீரைச் சேகரித்தீர்கள்.
10
பின்பு எருசலேமிலுள்ள வீடுகளை எண்ணினீர்கள்; மதிலைப் பலப்படுத்துவதற்காக வீடுகளை உடைத்து வீழ்த்தினீர்கள்.
11
பழைய குளத்துத் தண்ணீரைச் சேகரிப்பதற்காக, நீங்கள் இரு மதில்களுக்கிடையில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்தீர்கள். ஆனால் இதை உண்டாக்கியவரை நீங்கள் நோக்கவும் இல்லை; ஆதியிலே இதைத் திட்டமிட்டவரை நீங்கள் மதிக்கவும் இல்லை.
Settings