ஓசியா 4:12-19
12
எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள். வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது; அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.
13
அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.
14
“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும், மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும் நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன். ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு, கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள், அறிவில்லாத அம்மக்கள் சீரழிந்து போவார்கள்.
15
“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும். “நீ கில்காலுக்குப் போகவேண்டாம்; பெத்தாவேனுக்கும் போகவேண்டாம். ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.
16
இஸ்ரயேலரோ அடங்காத இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள். அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில் செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்?
17
எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்; அவனைத் தனியே விட்டுவிடு!
18
அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்; அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள்.
19
சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும், அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள் அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.
Settings