Skip to content
எபிரெயர் 12:1-18

எபிரெயர் 12:1-18

1
எனவே இப்படிப்பட்ட பெருந்திரளான சாட்சிகள் ஒரு மேகத்தைப்போல் நம்மைச்சுற்றி இருக்கிறதினால், நம்மைத் தடைசெய்கிற எல்லா பாரத்தையும், நம்மை இலகுவாய் சிக்கவைக்கிற பாவத்தையும் அகற்றிவிட்டு, நமக்காக நியமிக்கப்பட்டிருக்கிற இந்த ஓட்டப் பந்தயத்தில், விடாமுயற்சியுடன் ஓடுவோம்.
2
விசுவாசத்தைத் தொடங்குகிறவரும், அதை நிறைவு செய்பவருமாகிய இயேசுவின்மேல் நமது கண்களை பதிய வைப்போம். அவர் தமக்கு முன்பாக இருந்த மகிழ்ச்சியை நினைத்து, அவமானத்தை பொருட்படுத்தாமல் சிலுவையை சகித்து இறைவனுடைய அரியணையின், வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
3
நீங்கள் மனந்தளர்ந்து சோர்ந்துபோகாதபடிக்கு பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக்குறித்துச் சிந்தியுங்கள்.
4
பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு, நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
5
ஒரு தந்தை தனது மகனைக் கூப்பிடுவதைப்போல, உங்களைக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்: “என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது, அதை அலட்சியப்படுத்தாதே; அவர் உன்னைக் கண்டிக்கும்போது, மனந்தளர்ந்து போகாதே.
6
ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.”
7
கஷ்டங்கள் வரும்போது அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து, சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கிறான்?
8
பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால், அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல், முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள்.
9
மேலும், நம்மைத் தண்டித்துத் திருத்திய சரீரத்தின் தந்தைமார்கள் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கிறவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்?
10
நம்முடைய சரீரத்தின் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்; ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக, நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார்.
11
நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் சந்தோஷமாயிருக்காமல், வேதனையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது, பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு நீதிநிறைந்த சமாதான அறுவடையை தரும்.
12
ஆகவே, தளர்ந்துபோன உங்கள் கைகளையும் பலவீனமான உங்கள் முழங்கால்களையும் பெலப்படுத்துங்கள்.
13
முடமானவர்கள் முற்றும் ஊனமடைந்து போகாமல் குணமடையும்படி, உங்கள் பாதைகளை சரியான நிலைக்குக் கொண்டுசெல்லுங்கள்.
14
எல்லோருடனும் சமாதானமாய் வாழவும், உங்கள் நடத்தையில் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் எல்லா முயற்சியையும் செய்யுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவரும் கர்த்தரைக் காணமுடியாது.
15
இறைவனுடைய கிருபையை ஒருவரும் இழந்து போகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் குழப்பத்தை விளைவித்து, பலரைக் கறைப்படுத்தும் கசப்புணர்வு வேரூன்றி முளைக்க இடங்கொடாதேயுங்கள்.
16
உங்களில் யாரும் முறைகேடான பாலுறவில் ஈடுபடாதபடி கவனமாயிருங்கள். ஒருவேளைச் சாப்பாட்டிற்காக மூத்த மகனுக்குரிய தன் பிறப்புரிமையை விற்றுவிட்ட ஏசாவைப்போல், பக்தியில்லாதவனாய் இராதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.
17
நீங்கள் அறிந்திருக்கிறபடி, அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும், அவனுக்கு அந்நிலையை மாற்றமுடியவில்லை.
18
நீங்கள் இப்பொழுது வந்திருப்பது தொடக்கூடியதும், நெருப்பு பற்றி எரிகிறதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options