ஆதியாகமம் 16:1-6
1
ஆபிராமின் மனைவி சாராய் அவனுக்குப் பிள்ளைகளைப் பெறவில்லை. ஆனால் அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்;
2
எனவே சாராய் ஆபிராமிடம், “யெகோவா என்னைப் பிள்ளை பெறாதபடி ஆக்கியிருக்கிறார். ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்ளும்; ஒருவேளை அவள் மூலமாயினும் நான் ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடியதாய் இருக்கும்” என்றாள். ஆபிராம் சாராயின் சொல்லுக்கு இணங்கினான்.
3
எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
4
ஆபிராம் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள். தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமாட்டியான சாராயை இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினாள்.
5
சாராய் அதைக்கண்டு ஆபிராமிடம், “நான் வேதனைப்படுவதற்கான அநியாயத்திற்குப் பொறுப்பு நீரே. என் பணிப்பெண்ணை நான் உமக்குக் கொடுத்தேன், இப்பொழுது அவள் தான் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்து, என்னை இகழ்ச்சி செய்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில், யெகோவாவே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.
6
அதற்கு ஆபிராம், “உன் பணிப்பெண், உன் பொறுப்பில்தானே இருக்கிறாள், எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ, அதை அவளுக்குச் செய்” என்றான். அதன்பின் சாராய் ஆகாரைக் கொடுமைப்படுத்தினாள்; அதனால் ஆகார் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
Settings