Skip to content
எசேக்கியேல் 27:12-25

எசேக்கியேல் 27:12-25

12
“ ‘உன் பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தம் தர்ஷீஸ் வர்த்தகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை மாற்றீடு செய்தார்கள்.
13
“ ‘கிரீஸ், தூபால், மேசேக் வர்த்தகர்களும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக அடிமைகளையும், வெண்கலப் பொருட்களையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
14
“ ‘பெத்தொகர்மா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதரும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வேலைசெய்யும் குதிரைகளையும், போர்க் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
15
“ ‘தேதான் மனிதர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அநேக கடலோர நாடுகள் உன் வாடிக்கையாளர்களாய் இருந்தன. அவர்கள் யானைத்தந்தங்களையும், கருங்காலி மரங்களையும் உன்னிடம் மாற்றீடாய் தந்தார்கள்.
16
“ ‘சீரியர் உன் அநேக உற்பத்திகளினிமித்தம் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் இளநீல இரத்தினங்களையும் ஊதாநிற துணிகளையும் வேலைப்பாடமைந்த உடைகளையும், மென்பட்டுத் துணிகளையும், பவளத்தையும், சிவப்பு இரத்தினத்தையும் உன்னிடம் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
17
“ ‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
18
“ ‘தமஸ்கு, உனது பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தமும், உன் அநேக உற்பத்திப் பொருள்களினிமித்தமும் கெல்போனின் திராட்சை இரசத்தையும், ஷாகாரின் ஆட்டுமயிரையும் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தது.
19
வேதண் என்கிற தாண் நாட்டாரும் கிரேக்கரும் ஊசாவிலிருந்து வந்து, உனது வர்த்தகப் பொருட்களை வாங்கினார்கள். அவர்கள் அடித்துச் செய்யப்பட்ட இரும்பையும், கறுவாவையும், வசம்பையும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக மாற்றீடு செய்தார்கள்.
20
“ ‘தேதான் சேணத்திற்குப் பயன்படுத்தும் கம்பளங்களை உனக்கு விற்றது.
21
“ ‘அரேபியாவும், கேதாரின் சகல இளவரசர்களும் உன் வாடிக்கையாளர்களாயிருந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றைக்கொண்டு உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
22
“ ‘சேபா, ராமாவின் வணிகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் வியாபாரப் பொருள்களுக்காக எல்லாவித உயர்தர வாசனைத் திரவியங்களையும், விலை உயர்ந்த கற்களையும், தங்கத்தையும் மாற்றீடு செய்தார்கள்.
23
“ ‘ஆரான், கன்னே, ஏதேன் ஆகியவற்றுடன் சேபா, அசீரியர், கில்மாத் வணிகரும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
24
அவர்கள் உனது சந்தையில் அழகிய உடைகள், நீலப்பட்டுத் துணி, வேலைப்பாடமைந்த தையல் துணி, கயிறுகளால் பின்னப்பட்ட பலவர்ணக் கம்பளிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
25
“ ‘உனது பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு தர்ஷீஸின் கப்பல்கள் பயன்பட்டன. அவை கடலின் நடுவில் பாரமான பொருள்களினால் நிரப்பப்பட்டுள்ளன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options