எசேக்கியேல் 21:23-32
23
உடன்படிக்கையில் உண்மையாய் இருப்போம் என அவனுக்கு ஆணையிட்டவர்களுக்கு அது போலியான சகுனமாய்க் காணப்படும். ஆனால் அவர்களுடைய குற்றத்தை அவன் அவர்களுக்கு நினைவுப்படுத்தி, அவர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுபோவான்.
24
“ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘நீங்கள் செய்த அனைத்திலும், உங்கள் பாவங்களை வெளிப்படுத்தினீர்கள். வெளிப்படையாய் கலகம்செய்து, உங்கள் குற்றங்களை நினைவுபடுத்தினீர்கள். இதைச் செய்தபடியினால், நீங்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள்.
25
“ ‘இஸ்ரயேலின் சீர்கெட்ட கொடிய இளவரசனே, உன் நாள் வந்துவிட்டது. உன் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது.
26
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, உன் தலைப்பாகையை எடுத்துவிடு. உன் மகுடத்தை அகற்றிவிடு. அது முன்னர் இருந்ததுபோல் இனி இருக்கமாட்டாது. தாழ்ந்தவன் உயர்த்தப்படுவான், உயர்ந்தவன் தாழ்த்தப்படுவான்.
27
அழிவோ அழிவு! அதைப் பாழாக்குவேன். அதற்கு உரிமையானவர் வருமட்டும் அது திரும்பவும் நிலைநாட்டப்படுவதில்லை. அவருக்கே நான் அதைக் கொடுப்பேன்.’
28
“மனுபுத்திரனே, இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘அம்மோனியரையும் அவர்களுடைய நிந்தைகளையும் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘ஒரு வாள், ஒரு வாள், வெட்டுவதற்காக உருவப்பட்டிருக்கிறது. அழிப்பதற்காக மின்னல் கீற்றுப்போல் பாயும்படி அது துலக்கப்பட்டது.
29
உன்னைக்குறித்துப் பொய்யான தரிசனங்களும், பொய்யான குறிகளும் கூறப்பட்டபோதிலும், கொலைசெய்யப்பட வேண்டிய கொடியவர்களின் கழுத்திலே அந்த வாள் வைக்கப்படும். அவர்களின் நாள் வந்துவிட்டது! அவர்கள் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது.
30
“ ‘வாளைத் திரும்பவும் அதன் உறையில் போடு. நீ உருவாக்கப்பட்ட இடத்தில், உன் மூதாதையரின் நாட்டில் நான் உன்னை நியாயம் விசாரிப்பேன்.
31
நான் எனது கோபத்தை உன்மேல் ஊற்றுவேன். உனக்கு விரோதமாய் என் சுட்டெரிக்கும் கோபத்தை ஊதுவேன். முரட்டு மனிதரிடமும் அழிப்பதில் வல்லவரான மனிதரிடமும் நான் உன்னைக் கையளிப்பேன்.
32
நீ நெருப்புக்கு விறகாவாய். உனது நாட்டிலே உன் இரத்தம் சிந்தப்படும். இனிமேல் நீ நினைக்கப்படமாட்டாய். ஏனெனில் யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்றார்.’ ”
Settings