தானியேல் 4:10-17
10
நான் எனது படுக்கையில் படுத்திருக்கையில் கண்ட தரிசனங்கள் இவையே: நான் பார்த்தபோது எனக்கு முன்பாக நாட்டின் நடுவில் ஒரு மரம் நின்றது. அது மிக உயரமாயிருந்தது.
11
அந்த மரம் விசாலமாயும் வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை ஆகாயத்தைத் தொட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அதைப் பார்க்கக் கூடியதாயிருந்தது.
12
அதன் இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டன. எல்லோருக்கும் உணவும் அதில் இருந்தது. அதன் கீழே வெளியின் மிருகங்கள் புகலிடமடைந்திருந்தன. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகளும் குடியிருந்தன. அதிலிருந்து எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்தது.
13
நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது, இந்தத் தரிசனத்தைக் கண்டேன். அதில் பரலோகத்திலிருந்து இறங்கி ஒரு பரிசுத்த தூதன் எனக்கு முன்பாக வந்தார்.
14
அவர் உரத்த சத்தமிட்டு, “இந்த மரத்தை வெட்டி வீழ்த்துங்கள். கிளைகளை அகற்றிப்போடுங்கள். அவற்றின் இலைகளை உதிர்த்து விடுங்கள். பழங்களைப் பறித்தெறியுங்கள். இந்த மரத்தின் கீழுள்ள மிருகங்களெல்லாம் ஓடிவிடட்டும். அதன் கிளைகளில் தங்கியுள்ள பறவைகளும் பறந்துவிடட்டும்.
15
ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் இரும்பினாலும், வெண்கலத்தினாலும், கலந்து செய்யப்பட்ட சங்கிலியில் கட்டப்பட்டதாய் வயல்வெளியின் புற்தரையில் மீந்திருக்க விட்டுவிடுங்கள்” என்றார். மேலும் அவர், “ ‘வானத்தின் பனியில் நனைந்து, பூமியிலுள்ள மிருகங்களோடு வெளியில் பயிர்களுக்கிடையில் வாழட்டும்.
16
அவனுடைய மனம் மாற்றப்பட்டு மனித மனமாயிராமல் போகட்டும். ஏழு காலங்கள் அவனைக் கடந்துசெல்லும்வரை மிருகத்தின் மனம் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்.
17
“ ‘அந்த தீர்மானம் தூதுவர்களாலும் அந்தத் தீர்ப்பு பரிசுத்தராலும் அறிவிக்கப்படுகிறது. மகா உன்னதமானவரே பூமியில் மனிதருடைய அரசுகளுக்கு மேலாக ஆளுபவர் என்பதையும், அவர் தாம் விரும்புகிறவர்களுக்கு அரசுகளைக் கொடுப்பவர் என்பதையும், அவற்றிற்கு மேலாக மனிதரில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை நியமித்திருப்பவர் என்பதையும், உலகில் வாழ்வோர் எல்லோரும் அறிந்துகொள்ளும்படியே அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.’
Settings