Skip to content
அப்போஸ்தலர் 27:13-20

அப்போஸ்தலர் 27:13-20

13
அப்பொழுது தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசத்தொடங்கியபோது, தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை ஏற்றி, கிரேத்தா தீவின் கரையோரமாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.
14
ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே, வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று, தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று.
15
கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டது. காற்றை எதிர்த்துக் கப்பலைத் திருப்ப முடியவில்லை.
16
எனவே காற்றின் திசையிலேயே, கப்பலைச் செல்லவிட்டோம். நாங்கள் கிலவுதா எனப்பட்ட ஒரு சிறிய தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்து போகையில், கப்பலில் இருந்த உயிர்காப்பு படகை சிரமத்துடன் பாதுகாத்துக் கொண்டோம்.
17
கப்பலாட்கள் அதைக் கப்பலுக்குள் தூக்கி எடுத்தார்கள். அதற்குப் பின்பு அவர்கள் கப்பல் உடையாது வைத்திருப்பதற்காகக் கப்பலையும் கயிறுகளால் இணைத்துக் கட்டினார்கள். சிர்த்திஸ் வளைகுடா பகுதியிலுள்ள சொரிமணல் திண்டுகளில் கப்பல் மோதிவிடுமோ என்று அவர்கள் பயந்து, கப்பற்பாயை இறக்கிக் காற்றின் திசையிலேயே கப்பலை அடித்துச்செல்ல போகவிட்டார்கள்.
18
நாங்கள் புயலினால் மிகவும் அடிக்கப்பட்டோம். அதனால் மறுநாளிலே, கப்பலாட்கள் கப்பலிலுள்ள பொருட்களை வெளியே எறியத் தொடங்கினார்கள்.
19
மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பல் தளவாடங்களையும் எறிந்தார்கள்.
20
பல நாட்களாக சூரியனோ நட்சத்திரங்களோ காணப்படவில்லை. புயலும் வேகமாய் வீசிக்கொண்டிருந்தது. இதனால் நாங்கள் உயிர் தப்புவோம் என்ற எதிர்பார்ப்பும் அற்றுப்போயிற்று.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options