Skip to content
2 இராஜாக்கள் 7:10-16

2 இராஜாக்கள் 7:10-16

10
அவ்வாறே அவர்கள் போய் நகர வாசல் காவலாளரைக் கூப்பிட்டு, “நாங்கள் சீரியருடைய முகாமுக்குப் போயிருந்தோம். அங்கு ஒருவரும் இல்லை. ஒரு மனித சத்தமும் கேட்கப்படவுமில்லை. குதிரைகளும், கழுதைகளும் கட்டப்பட்டபடியே இருந்தன. கூடாரங்களும் இருந்தபடியே விடப்பட்டிருந்தன” என்றார்கள்.
11
இதைக் கேட்ட வாசல் காவலாளர்கள் இச்செய்தியை அரண்மனையில் உள்ளோரிடம் அறிவித்தார்கள்.
12
இரவிலே அரசன் எழுந்து தன் அதிகாரிகளிடம், “சீரியர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் பட்டினியாக இருப்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் முகாமைவிட்டு, பதுங்கித் தாக்குவதற்காக வெளியே சென்றிருக்க வேண்டும். மேலும், ‘இஸ்ரயேலர் நகரத்துக்கு வெளியே நிச்சயமாய் வருவார்கள். அப்போது அவர்களை உயிரோடு பிடித்து, நகரத்துக்குள்ளே போவோம்’ என்றும் நினைத்திருப்பார்கள்” என்று கூறினான்.
13
அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன் அதற்குப் பதிலாக, “நகரத்தில் மீதியாயுள்ள ஐந்து குதிரைகளையும் சிலர் எடுத்துக்கொண்டு அங்கே போகட்டும். அவர்கள் இறந்தாலும் என்ன? இங்கிருந்து மீந்திருக்கும் இஸ்ரயேலருக்கு நடப்பது தான் அவர்களுக்கும் நடக்கும். ஆகவே என்ன நடந்ததென்பதை அறிந்துவரும்படி நாம் அவர்களை அனுப்புவோம்” என்றான்.
14
அவ்வாறே அவர்கள் இரண்டு தேர்களையும், குதிரைகளையும் தெரிந்தெடுத்தார்கள். அரசன் தேரோட்டிகளிடம், “நீங்கள் போய் என்ன நடந்தது என்று பார்த்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவர்களைச் சீரிய இராணுவத்தைப் பின்தொடரும்படி அனுப்பினான்.
15
அவர்கள் யோர்தான்வரை பின்தொடர்ந்து சென்றார்கள். சீரியர் பயந்து தலைதெறிக்க ஓடியபோது, அவர்களுடைய உடைகளும், மற்றும் ஆயுதங்களும், வழியெல்லாம் வீசப்பட்டுக் கிடந்ததைக் கண்டார்கள். அதைத் தூதுவர்கள் திரும்பிவந்து அரசனுக்கு அறிவித்தார்கள்.
16
அப்பொழுது மக்கள் போய் சீரியரின் முகாமைக் கொள்ளையிட்டார்கள். அதனால் யெகோவா வாக்களித்தபடியே ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options