2 நாளாகமம் 35:1-12
1
யோசியா எருசலேமில் யெகோவாவுக்கென்று பஸ்காவைக் கொண்டாடினான்; முதலாம் மாதம் பதினான்காம் நாளில் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டி வெட்டப்பட்டது.
2
அவன் ஆசாரியர்களை அவர்களுடைய கடமைகளுக்கென நியமித்தான். யெகோவாவின் ஆலயத்தின் பணிகளைச் செய்யவும் அவர்களை ஊக்குவித்தான்.
3
அவன் இஸ்ரயேலர்களுக்கெல்லாம் அறிவுறுத்தல் கொடுப்பவர்களும், யெகோவாவுக்கென பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமான லேவியர்களிடம் சொன்னதாவது: “இஸ்ரயேலின் அரசன் தாவீதின் மகன் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்த பெட்டியை வையுங்கள். அது இனி உங்கள் தோள்களில் சுமக்கப்படக்கூடாது. இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் பணிசெய்யுங்கள்.
4
இஸ்ரயேலின் அரசன் தாவீதும், அவன் மகன் சாலொமோனும் எழுதி வைத்துள்ள பணிகளுக்கேற்ப உங்கள் கோத்திரங்களிலுள்ள குடும்பங்களின்படியே உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.
5
“மற்ற மக்களான உங்கள் உடன் நாட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவுக்குமென ஒவ்வொரு கூட்டமாக லேவியர்களுடன் பரிசுத்த இடத்தில் நில்லுங்கள்.
6
பஸ்காவின் செம்மறியாட்டுக் குட்டிகளை வெட்டி, உங்களைப் பரிசுத்தப்படுத்தி, உங்கள் சக இஸ்ரயேலருக்காகப் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியை ஆயத்தப்படுத்துங்கள். இவ்விதமாக மோசே மூலம் யெகோவா கட்டளையிட்டதைச் செய்யுங்கள்” என்றான்.
7
யோசியா அங்கிருந்த எல்லா மற்ற மக்களுக்காகவும் பஸ்காவைப் பலியிடுவதற்காக முப்பதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் அவர்களுக்குக் கொடுத்தான். அதோடுகூட மூவாயிரம் மாடுகளையும் கொடுத்தான். இவையெல்லாவற்றையும் அரசன் தனக்குரியவற்றிலிருந்தே கொடுத்தான்.
8
அவனுடைய அதிகாரிகளும்கூட மக்களுக்கும், ஆசாரியருக்கும், லேவியர்களுக்கும் மனமுவந்து காணிக்கைகளைக் கொடுத்தார்கள். இறைவனின் ஆலய நிர்வாகிகளான இல்க்கியா, சகரியா, யெகியேல் ஆகியோரும் ஆசாரியருக்கு இரண்டாயிரத்து அறுநூறு பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகளையும், முந்நூறு மாடுகளையும் கொடுத்தார்கள்.
9
அத்துடன் லேவியர்களின் தலைவர்களான கொனானியாவும், செமாயாவும், நெதனெயேலும் அவனுடைய சகோதரர்களும், அஷபியாவும், எயேலும், யோசபாத்தும் ஐயாயிரம் பஸ்கா காணிக்கைகளையும், ஐந்நூறு மாடுகளையும் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
10
வழிபாடு ஒழுங்குசெய்யப்பட்டது. அரசன் கட்டளையிட்டபடி ஆசாரியர்கள் லேவியர்களுடன் தங்கள் பிரிவுகளின்படி தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள்.
11
பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகள் வெட்டப்பட்டன. ஆசாரியர்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்ட இரத்தத்தைத் தெளித்தார்கள். அந்த நேரம் லேவியர்கள் மிருகங்களின் தோலை உரித்தார்கள்.
12
அவர்கள் தகன காணிக்கைகளை வேறாக எடுத்துவைத்தார்கள். மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடி, அவை குடும்பங்களின் உட்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கென்று யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும்படி வைக்கப்பட்டன. அவர்கள் மாடுகளையும் அவ்வாறே செய்தார்கள்.
Settings